வேலூர் தி.மு.க. மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ பெயரில் பணம் பறிக்க முயற்சி
- போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி துணிகரம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
பேஸ்புக் கில் பிரபலமானவர்கள் பெயரில் போலிக் கணக்கு உருவாக்கி மோசடி செய்து வருவது அதிகரித்து வருகிறது. ஒரு நபரின் புகைப்படத்தை எடுத்து போலிக் கணக்கை துவக்கி, அவர்களது நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்களுக்கு நட்பு அழைப்பு விடுக்கப்படுகிறது.
அதனை உண்மையான கணக்காக நினைத்து நட்பு அழைப்பை ஏற்றால், சிறிது நேரத்தில் அவசரத் தேவைகளுக்காக பணம் தேவைப்படுகிறது என மெசேஜ் அனுப்பப்படுகிறது.
ஒரே நேரத்தில் பலருக்கும் இதேபோல மெசேஜ் அனுப்பப்படுகிறது. சிலர் நேரடியாக கேட்க தயக்கப்பட்டு இப்படி கேட்பதாக எண்ணி, பணத்தை அனுப்பும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
அதேசமயம் அது போலி கணக்கு என்பதை கண்டறிந்து கேள்வி கேட்டால், அந்தக் கணக்கு முடக்கப்படுகிறது. இப்படி மோசடி செய்வது தொடர் கதையாகி வருகிறது.
பேஸ்புக்கில் பிரபலமாக இருப்பவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பெயர்களில் இப்படி போலிக் கணக்குகள் துவங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வேலூர் மாவட்ட திமுக செயலாளர் அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏவான ஏபி நந்தகுமார் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
இதில் அவருடைய நட்பு வட்டாரத்தில் உள்ளவர்கள் இணையும்படி அழைப்பு விடுத்து பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்ட சிலர் நந்தகுமார் எம்.எல்.ஏ.வுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் நந்தகுமார் எம்.எல்.ஏ. பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பணம் கேட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அது போன்று வரும் தகவலை கண்டு யாரும் ஏமாற வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.