திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
- பெற்றோரிடம் அடிக்கடி தகராறு
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் விருப்பாட்சி புரத்தைச் சேர்ந்தவர் குப்பன். இவரது மகன் செல்வம் (வயது 22). இவர் பைக் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.
செல்வம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி அவரது பெற்றோரிடம் வலியுறுத்தி வந்தார். உனக்கு 22 வயது தான் ஆகிறது. எனவே கொஞ்ச நாள் பொறுத்து இருக்கும்படி அவரது பெற்றோர் மகனுக்கு அறிவுரை வழங்கினர்.
ஆனால் தனக்கு உடனே திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த செல்வம் திருமணம் செய்து வைக்கும்படி மீண்டும் தகராறு செய்தார்.
அவரது பெற்றோர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்தார்.
இதையடுத்து தனது அறைக்கு சென்ற செல்வம் அங்குள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில் தொங்குவதை கண்ட அவரது பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வம் திருமணம் ஆகாத இயக்கத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.