கோப்புப்படம்
வேலூரில் புதிய வழித்தடங்களில் டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் - பொதுமக்கள் வலியுறுத்தல்
- காட்பாடியில் இருந்து சத்துவாச்சாரி, தங்க கோவிலுக்கு பஸ்கள் இயக்க கோரிக்கை
- மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் புதிய வழிதடம் அமைக்கவில்லை என்று குற்றச்சாட்டு
வேலூர்:
காட்பாடியில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறை கேட்பு முகாமில் காந்திநகர் மக்கள் சேவை சங்கம் சார்பில் தலைவர் எஸ்.பகீரதன், செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், பொருளாளர் வி.பழனி ஆகியோர் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
வேலூர் சிறப்பு நிலை நகராட்சியாக இருந்து 1.08.2008 முதல் வேலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 2011-ல் காட்பாடி, சத்துவாச்சாரி போன்ற நகராட்சிகளும் பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளும் இணைக்கப்பட்டன.
நகராட்சியாக இருந்த போது நடைமுறையில் இருந்த காட்பாடி, பாகாயம் வழித்தடத்தில் மட்டுமே டவுன் பஸ்கள் இன்றளவும் இயக்கப்படுகின்றன. மாநகராட்சியாக தரம் உயர்தப்பட்டு காட்பாடி, சத்துவாச்சாரி ஆகிய நகராட்சிகள் இணைக்கப்பட்ட பிறகும் 10 ஆண்டுகள் கடந்த நிலையில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு டவுன் பஸ் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.
காட்பாடியிலிருந்து - அலமேலு ரங்காபுரம், கொணவட்டம், மாவட்ட வேலைவாய்பு அலுவலகம் மற்றும் தங்க கோயில் வரை டவுன் பஸ்கள் இயக்க வேண்டும்.
காட்பாடியில் இருந்து மதிநகர், ஜாப்ராபேட்டை, வஞ்சூர், கழிஞ்சூர், புதிய பஸ் நிலையம் வழியாக புதிய வழித்தடம் ஏற்படுத்த வேண்டும். சத்துவாச்சாரியிலிருந்து திருவள்ளுவர் பல்லைகழகம், மாவட்ட வேலைவாய்பு அலுவலகம், தங்ககோவில் வரை புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்க வேண்டும்.
கொணவட்டம் பகுதியிலிருந்து திருவள்ளுவர் பல்கலை கழகம், தங்க கோவில், விஐடி பல்கலைக்கழகம் போன்ற பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய வழித்தடம் ஏற்படுத்த வேண்டும்.
ஸ்ரீபுரம் பொற்கோவிலில் இருந்து காட்பாடி, அலமேலுமங்காபுரம், கொணவட்டம், திருவள்ளுவர் பல்கலைகழகம் போன்ற பகுதிகளுக்கு புதிய வழித்தடங்களில் டவுன் பஸ்கள் இயக்கப்பட வேண்டும்.
மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் இருந்து எந்த மண்டத்திற்கும் செல்ல ஏதுவாக புதிய டவுன் பஸ்கள் வழித்தடங்களை ஏற்படுத்தி தர வேண்டுகின்றோம்.
தற்போது நடைமுறையில் உள்ள காட்பாடி-பாகாயம் வழித்தடத்தில் காந்திநகரில் சாலையில் நடுவில் சென்டர் மீடியன் பொருத்தப்பட்டுள்ளதை காரணம் காட்டி டவுன் பஸ்கள் உள்ளே வராமல் சில்க்மில்-ஓடைபிள்ளையார் கோவில் வழியாக செல்கின்றன.
வழித்தடம் அனுமதியளிக்கப்பட்டுள்ள வகையில் சென்று திரும்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காட்பாடி-காங்கேயநல்லூர்-பாகாயம் வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.