உள்ளூர் செய்திகள்

காட்பாடியில் வீட்டின் பூட்டு உடைத்து திருட்டு

Published On 2023-10-21 13:42 IST   |   Update On 2023-10-21 13:42:00 IST
  • 2 தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை
  • கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

வேலூர்:

காட்பாடி ஏரிமுனை பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சுகுமார் (வயது 55), ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருடைய மனைவி சத்திய ஜீவகுமாரி. இவர் வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை சுகுமார் வீட்டை பூட்டி விட்டு தன்னுடைய மனைவியை பைக்கில் வேலூருக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை விட்டுவிட்டு மீண்டும் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 26.5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2½ லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து சுகுமார் காட்பாடி போலீசில் புகார் அளித்தார். தகவல் அறிந்த வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

மேலும் காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இது குறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News