உள்ளூர் செய்திகள்

பொதுமக்களை விசாரணைக்காக அலைக்கழிக்க கூடாது

Published On 2023-04-19 09:48 GMT   |   Update On 2023-04-19 09:48 GMT
  • டி.ஐ.ஜி. உத்தரவு
  • வெயில் தாக்கம் அதிகரிப்பால் நடவடிக்கை

வேலூர்:

ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை விசாரணைக்காக அலைக்கழிக்க வேண்டாம் என்று வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

''நான்கு மாவட்டங்களில் பெரும்பாலான நாட்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் தாக்கம் உள்ளது. எனவே, கோடை காலங்களில் போலீஸ் அதிகாரிகள் தங்கள் உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

போலீஸ் நிலையத்துக்கு வரும் குழந்தைகள், பெண்கள், முதியவர்களை கனிவுடன் வரவேற்று அவர்களை நிழலில் இளைப்பாறச் செய்து அவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்.

வெகு தொலைவில் இருந்து விசாரணைக்காக வருபவர்களை திரும்பத்திரும்ப வரச்சொல்லி கட்டாயப்படுத்தாமல் விரைவான நீதி கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதியவர்களுக்கு கோடை காலங்களில் தலைசுற்றல், திடீர் மயக்கம் போன்ற உடல் ரீதியான பிரச்சினைகள் இருக்கும். எனவே, மனித நேயத்தோடு மனுதாரர்களையும் எதிர் மனுதாரர்களையும் விசாரணை செய்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காக்கை, குருவி போன்ற பறவைகள் நீரின்றி அலையும் அவலத்தை தவிர்க்க சிறு, சிறு மண் குவளைகளில் நீர் ஊற்றி போலீஸ் நிலையங்களை சுற்றியுள்ள இடங்களில் திறந்த வெளிகளில் வைத்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

Tags:    

Similar News