கதிர்ஆனந்த் எம்.பி
காட்பாடியில் புதிதாக ரெயில்வே மேம்பாலம் அமைக்க ஆய்வு
- மேம்பாலத்தின் வரைபடமும், திட்ட மதிப்பீடும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்
- கதிர் ஆனந்த் எம்.பி.தகவல்
வேலூர்:
வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
காட்பாடி ரெயில்வே மேம்பாலம் ஓடுதளத்தின் இணைப்புகள் வலுவிழந்திருந்ததால் அதனை சீர்செய்யும் பணிகள் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு பழுதுபார்க்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது.
பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. ஒரே மாதத்தில் போர்க்கால அடிப்படையில் அந்தப் பாலத்தின் ஓடுத்தளம் முழுவதுமாக சரிசெய்யப்பட்டு முழு போக்குவரத்திற்கு தயார் நிலைக்கு உட்படுத்திய அதிகாரிகள், ரெயில்வே துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்துத்துறை போலீசார் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து கொள்கின்றேன்.
அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்தை கணக்கில் கொண்டு இப்போது இருக்கக்கூடிய பாலத்திற்கு அருகில் ஒரு புதிய மேம்பாலத்தை அமைத்திட தமிழக அரசு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
தமிழக அரசின் ஆய்வு அறிக்கை வரப்பெற்ற உடன் குறுகிய காலத்திற்கு உள்ளாகவே ஆய்வு அறிக்கை பரிசீலிக்கப்பட்டு புதிய மேம்பாலத்திற்கான வரைபடமும், திட்ட மதிப்பீடு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.