உள்ளூர் செய்திகள்

கல்வி கடன் முகாம்களை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்

Published On 2023-11-28 14:07 IST   |   Update On 2023-11-28 14:07:00 IST
  • வேலைக்கு சென்ற பின்பு திருப்பி செலுத்துவது கடமை
  • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேச்சு

வேலூர்:

வேலூர் அடுக்கம்பாறை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பு கல்விக்கடன் முகாமை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஏற்கனவே கல்வி கடனுக்காக விண்ணப்பித்திருந்த 33 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 3.25 கோடி மதிப்பில் கல்வி கடனுதவிக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார். அவர் பேசியதாவது:-

உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களின் பெற்றோர்களின் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில் வேலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வங்கிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து சிறப்பு கல்வி கடன் உதவி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

பல்வேறு கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை செலுத்தாத மாணவ, மாணவிகளை கல்லூரி நிர்வாகம் வெளியேற்றி விடுவதாக சமீப காலத்தில் ஒரு சில புகார்களும் வந்துள்ளன.

ஏழை எளிய பெற்றோர்கள் தங்களின் குடும்ப சூழ்நிலையையும் தாங்கிக்கொண்டு மாணவர்களை உயர்கல்வி படிக்க வைக்கும் பொழுது கல்வி கட்டணம் செலுத்துவதில் சிரமங்கள் உள்ளன.

இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இது போன்ற சிறப்பு கல்வி கடன் முகாம்கள் நடத்தப்படுகிறது.

கல்லூரி பயிலும் போது கல்வி கடனை பெற்ற மாணவ மாணவியர்கள் தாங்கள் படித்து முடித்த பிறகு வேலைக்கு செல்லும் பொழுது இந்த கடனை வங்கிகளுக்கு திரும்ப செலுத்த வேண்டும்.

எனவே கல்வி கடன் தேவைப்படுகின்ற மாணவ, மாணவிகள் இந்த சிறப்பு கல்வி கடன் முகாம்களை பயன்படுத்தி, வித்யாலட்சுமி போர்ட்டலில் விண்ணப்பித்து கடன் உதவி பெற்றுக் கொண்டு பயனடையலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, உதவி கலெக்டர் கவிதா, முன்னோடி வங்கி மேலாளர் ஜமாலுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News