சுழல் கோமராக்களுடன் கூடிய அதிநவீன கண்காணிப்பு வாகனத்தை டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் ஒப்படைத்த காட்சி.
சுழல் கேமராக்களுடன் அதிநவீன கண்காணிப்பு வாகனம்
- தமிழகத்தில் முதன் முறையாக வேலூரில் தொடங்கப்பட்டுள்ளது
- குற்ற சம்பவங்களை தடுக்க சிறப்பு ஏற்பாடு
வேலூர், டிச.2-
வேலூர் மாநகராட்சி பகுதியில் ஏற்கனவே சாதாரண சிசிடிவி கேமராக்கள் உள்ளன, 24 மணி நேரமும் போலீசாரால் கண்காணிக்கப்படுகிறது. மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கேமரா காட்சிகளை கண்காணித்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க வேலூர் மாநகர பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும் அவசர காலங்களில் ஈடுபடுத்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.56 லட்சம் மதிப்பில் அதிநவீன கண்காணிப்பு வாகனம் வாங்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் 360 டிகிரி சுழலக்கூடிய கேமராக்கள் 4 புறமும் பொருத்தப்பட்டுள்ளன. ட்ரோன் கேமரா உள்ளது.வாகனம் நிறுத்தப்படும் இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துல்லியமாக படம் பிடிக்கக்கூடிய திறன் கொண்டது. இதில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தகவல் மூலம் குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும்.
இந்த கேமராக்கள் வாகனங்கள் மற்றும் நம்பர் பிளேட்களை படம்பிடிப்பது மட்டுமல்லாமல், கலெக்டர் அலுவலகம், எஸ்.பி அலுவலகம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நேரடி காட்சிகள் வழங்கும்.
இந்த வாகனத்தில் ஜெனரேட்டர் வசதி சேட்டிலைட் வசதி உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.
இந்த வாகனத்தை கார்த்திகேயன் எம் எல் ஏ. மேயர் சுஜாதா ஆகியோர் பூஜை போட்டு தொடங்கி வைத்தனர். இந்த வாகனம் மாநகராட்சி மூலம் வேலூர் மாவட்ட காவல்துறைக்கு இன்று ஒப்படைக்கப்படுகிறது.
முதன் முதலாக திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா பாதுகாப்பில் இந்த வாகனம் ஈடுபடுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
டி.ஜி.பி.யிடம் ஒப்படைப்பு
வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்த வாகனம் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தின் முதல் முறையாக வேலூரில் அதிநவீன கண்காணிப்பு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இது வேலூர் மட்டுமின்றி சென்னை மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும். முதல் முறையாக திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழக காவல்துறை முன்னோடியாக உள்ளது.
தமிழகத்தில் போதை பொருள் கடத்தல் அதிகளவு தடுக்கப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகம் முழுவதும் சைபர் கிரைம் சம்பந்தமாக 48,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. செல்போன்களில் வங்கி கணக்கு ஆதார் எண் பான் எண் கேட்டு வரும் மோசடி நபர்களிடம் ஏமாறக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
ஆன்லைன் ரம்மி ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.