புதிய ரேசன் கார்டு பெற தாலுகா அலுவலகங்களில் சிறப்பு முகாம்
- பெயர் சேர்க்க, திருத்தம் செய்து கொள்ளலாம்
- நாளை நடக்கிறது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1மணி வரை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது.
ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு மற்றும் நகல் குடும்ப அட்டைக்கு மனு செய்தல், செல்போன் எண் பதிவு செய்தல், குடும்பத் தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் ஆகியவைகள் மேற்கொள்ளப்படும்.
பொது விநியோகத்திட்ட பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதனையும் இம்முகாமில் அலுவலர்களிடம் தெரிவித்து பரிகாரம் காணலாம்.
மனுதாரர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆவணங்களின் நகலுடன், தொடர்புடைய தாலுகா அலுவலகங்களில் அரசு வகுத்துள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் மற்றும் கிருமி நாசினி உபயோகித்தல் உள்ளிட்டவைகளை தவறாமல் கடைபிடித்து முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளனர்.