வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்த காட்சி.
தி.மு.க.ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேலூர் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் மெத்தனம்
- 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன
- ஆலோசனை கூட்டத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆவேசம்
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கதிர் ஆனந்த் எம்.பி. எம்.எல்.ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், கமிஷனர் அசோக்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கதிர் ஆனந்த் எம்பி பேசியதாவது:-
வேலூர் மாநகராட்சியில் பல்வேறு பணிகள் 5 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்ப ட்டுள்ளன. இதனை கண்காணித்து உடனடியாக பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாமக்கல்லில் தேர்ந்தெ டுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் குறித்த கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட முதல்அமைச்சர் மு. க. ஸ்டாலின் மக்கள் பணிகளில் தேர்ந்தெ டுக்கப்பட்ட பிரதிநிதிகளால் ஏதாவது இடையூறு ஏற்பட்டால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பணிகளில் எந்தவித மெத்தனம் காட்டாமல் சிறந்த முறையில் செய்ய வேண்டும். வேலூர் மாநகராட்சி பகுதியில் முதல்அமைச்சர் வந்து சென்ற சில நாட்களில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பைக் மற்றும் ஜூப் அகற்றாமல் அதனோடு சேர்த்து சாலை அமைத்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதன் மூலம் ஆட்சிக்கு கெட்ட பெயர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுள்ளனர்.இதற்கு காரணமான அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இந்த சாலையை போட்ட காண்ட்ராக்டர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் இது போன்ற தவறுகள் செய்யக்கூடாது.
ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
அப்போது பேசிய கலெக்டர் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டே பைக், ஜீப் அகற்றாமல் சாலை அமைத்துள்ளனர்.சாலை அமைத்தவர் மீது கண்டிப்பாக வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
கூட்டத்தில் நந்தகுமார் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை கிடப்பில் போடுவதால் அந்த பகுதி கவுன்சிலர் மாநகராட்சி, எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு கெட்ட பெயர் ஏற்படும்.
எனவே கடந்த 5 ஆண்டுகள் போல் இல்லாமல் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனது தொகுதிக்கு உட்பட்ட வேலூர் மாநகராட்சியில் 6 வார்டுகள் உள்ளன. இதில் பல்வேறு பகுதிகளில் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளில் மீண்டும் பள்ளம் தோண்டி குழாய்களை பதிக்க கூடாது. அந்த பணிகளை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். ஏற்கனவே போடப்பட்ட சாலைகளை தோண்டி மீண்டும் குழாய் பதித்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்றார்.
கூட்டத்தில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேசுகையில்:-
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் அனைத்து பணிகளுக்கும் அ.தி.மு.க.வினர்தான் டெண்டர் எடுத்துள்ளனர்.எங்கள் ஆட்சி காலத்தில் விடப்பட்ட டெண்டர்கள் இல்லை ஆகவே தான் மெத்தனமாக பணிகள் நடந்து வருகிறது.இதன் மூலம் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.
வேலூர் மாநகராட்சியில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகளை விரைவு படுத்த வேண்டும். வேலூர் புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்படும் கண்கா ணிகப்பு கேமராக்களை மாநகராட்சியோடு இணைக்க வேண்டும். அதன் மூலம் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
தொடர்ந்து பேசிய எம்.பி., எம். எல்.ஏ.க்கள் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து தரமாக முடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.