கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பைக்கில் சாகசம் செய்த இளைஞர்களை எச்சரிக்கை செய்த காட்சி.
பைக் சாகச தொல்லை இளைஞர்களுக்கு கடும் எச்சரிக்கை
- சாலை - தெருக்களில் அட்டகாசம் செய்ததால் நடவடிக்கை
- பைக்கில் வேகமாக சென்ற 4 பேரை போலீசார் பிடித்தனர்
வேலூர்:
வேலூரில் பகல் மற்றும் நள்ளிரவு வேளைகளில் இளைஞர்கள், 'பைக் ரேஸ், வீலிங்' போன்ற சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தைகள் சிறுவர்கள் அதிக நடமாட்டம் உள்ள தெருக்களில் அதிவேகமாக செல்லும் பைக் ரோமியோக்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இவர்களால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன், விபத்திலும் சிக்குகின்றனர்.
இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று வேலூர் கஸ்பா பகுதிகளில் இளைஞர்கள் 4 பேர் தெருவில் அதிவேகமாக பைக்கில் சென்று சத்தம் எழுப்பி இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.
இது பற்றி பொதுமக்கள் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் மூலம் அந்த இளைஞர்கள் பிடிக்க உத்தரவிட்டனர். அவர்களை போலீசார் பிடித்து வந்து வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர். அப்போது இளைஞர்களின் பெற்றோர்களும் வரவழைக்கப்ப ட்டிருந்தனர்.
பைக்கில் சுற்றி இடையூறு செய்த இளைஞர்களுக்கு கலெக்டர் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என அறிவுரை வழங்கினார். அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் ஒரு வாரத்திற்கு பிறகு தான் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.
வேலூர் மாநகரப் பகுதியில் பைக்கில் சுற்றி அத்து மீறி திரியும் இளைஞர்கள் கண்காணிக்கப்ப டுகின்றனர். மாநகரப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவு வாயிலாக, வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து, வாகன உரிமையாளர், வாகனத்தை ஓட்டியவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர்.
அதேபோல், வாகன சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள், அதை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.அந்த வீடியோ பதிவு அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.