வேலூர் கோட்டையில் அர்ஜுன் சம்பத் பேட்டி அளித்த காட்சி.
ஏழை இந்து மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்க வேண்டும்
- வேலூரில் அர்ஜுன் சம்பத் பேட்டி
- சாதி மத சின்னங்கள் அணிந்து பள்ளி கல்லூரிகளுக்கு வருவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்
வேலூர்:
இந்து மக்கள் கட்சி சார்பில் 75- வது ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் சுதந்திரப் போராட்ட நினைவிடங்கள் தியாகச் சின்னங்களுக்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதற்காக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று வேலூர் கோட்டைக்கு வந்தார்.அப்போது அவர் கூறியதாவது
75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் இந்து மக்கள் கட்சி சார்பில் சுதந்திர போராட்ட தியாகச் சின்னங்களை பார்வையிட்டு மரியாதை செலுத்தி வருகிறோம் .இதற்கு போலீசார் தடை வைத்துள்ளனர். இதனை நீக்க வேண்டும்.
எனது வாகனத்தில் எழுதப்பட்ட வாசகங்களை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனது சொந்த வாகனத்தில் எழுதப்பட்ட வாசகத்தை மறைப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாகும்.
இன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளாகும். அவர்தான் பள்ளிகளில் ஜாதி மதத்தை ஒழிப்பதற்காக சீருடை கொண்டு வந்தார்.இலவச உணவு திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் தற்போது அரசு பள்ளிகளின் ஜாதி மத சின்னங்களோடு மாணவர்கள் வருகின்றனர்.
வேலூர் வாணியம்பாடி பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு மத அடையாளங்களோடு சென்று வருகின்றனர்.
அது போன்ற சாதி மத சின்னங்கள் அணிந்து பள்ளி கல்லூரிகளுக்கு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இது சம்பந்தமாக தற்போது புதிய விதிமுறைகளை அரசு கொண்டுவந்துள்ளது.அதனை வரவேற்கிறேன். மதம் அடிப்படையில் கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏழை இந்து மாணவ மாணவிகளுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும்.
முதல்அமைச்சர் மு க ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து மக்கள் பணியாற்ற வரவேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன். அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது. மத்திய அரசோடு இணைந்து செயல்பட்டால் தமிழகத்திலும் கொரோனாவை மேலும் கட்டுப்படுத்த முடியும்.
அ.தி.மு.க.வில் தற்போது உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. மோதல் ஏற்பட்ட காரணத்தைக் காட்டி அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை தொண்டர்களின் ஆதரவால் இடைக்கால பொது செயலாளராக தேர் ந்தெடுக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க. தொண்டர்கள் அந்த கட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் ஒன்றிணைந்து காப்பாற்றுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.