சத்துவாச்சாரி சர்வீஸ் சாலையில் செல்லும் வாகனங்கள்.
சத்துவாச்சாரி, சேண்பாக்கம் ரெயில்வே மேம்பால சர்வீஸ் சாலையை அகலப்படுத்த வேண்டும்
- பொதுமக்கள் வலியுறுத்தல்
- கிரீன் சர்க்கிள் போக்குவரத்து மாற்றத்தால் நெரிசல் ஏற்பட்டது
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே கிரீன் சர்க்கிளில் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
சென்னை மார்க்கமாக வரும் வாகனங்கள் சென்னை அருகே சர்வீஸ் சாலையில் இறங்கி கிரின் சர்க்கிளை அடைவதை தடுக்க அந்த பாதை அடைக்கப்பட்டது.
அனைத்து வாகனங்களும் சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தை சுற்றிக்கொண்டு புதிய பஸ் நிலையம் செல்ல வேண்டும். அதேபோன்று வேலூர்- திருவண்ணாமலை மார்க்கமாக வரும் வாகனங்கள் நேஷனல் தியேட்டர் சந்திப்பு அருகே உள்ள ரவுண்டானாவில் இடது புறம் திரும்பி சர்வீஸ் சாலையை அடைந்து சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலம் வழியாக புதிய பஸ் நிலையத்திற்கு வருகின்றன.
திருப்பதி காட்பாடி செல்லும் பஸ் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களும் இந்த பாதையில் வருகின்றன. ரெயில்வே பாலத்திற்கு செல்லக்கூடிய சர்வீஸ் சாலை இருபுறமும் மிகக் குறுகலாக உள்ளது.
இந்த சாலை ஓரங்களில் சில இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மெக்கானிக் கடைகளுக்கு சொந்தமான வாகனம் நிறுத்தப்படுகின்றன. இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு உள்ளது. சர்வீஸ் சாலையில் ஆமை வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
இந்த சர்வீஸ் சாலையை 5 மீட்டரில் இருந்து 8.5 மீட்டராக அகலம் அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் கூறியிருந்தனர்.ஆனால் ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் சாலை அகலப்படு த்தப்படுவதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.
அதே நேரத்தில் சர்வீஸ் சாலையில் எதிர் திசையில் சில வாகனங்கள் சென்று வருவது தொடங்கிவிட்டது.
முத்துமாண்டபம் சாலையில் உள்ள சப்வேயில் வாகனங்கள் சென்று திரும்பக்கூடாது என்பதற்காக அதை தடுப்புகள் வைத்து அடைத்து இருந்தனர்.அதையும் எடுத்துவிட்டு சிலர் இஷ்டத்துக்கு சென்று வருகின்றனர். ராணிப்பேட்டை சென்னை ஆற்காடு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் சர்வீஸ் சாலையில் இருந்து கிரீன் சர்க்கிளுக்கு வருவதை தடுக்க சத்துவாச்சாரி பகுதியில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டு வாகனங்களை திருப்பி விடுகின்றனர்.
சென்னை சில்க்ஸ் அருகே சாலை தடுப்பு வைத்து அடைக்கப்பட்டுள்ளது. இதனால் வள்ளலார் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கார்கள் சர்வீஸ் சாலைக்கு வருகின்றன.
இதனால் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சத்துவாச்சாரி சர்வீஸ் சாலை ஏற்கனவே குறுகலாக தான் உள்ளது. அதனை விரிவுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.