உள்ளூர் செய்திகள்

ஒடுகத்தூர் உத்திரக்காவேரி ஆற்றில் தோண்டி எடுக்கப்பட்டுள்ள மணல் குவியல்.

உத்திரகாவேரி ஆற்றில் 20 கி.மீ தூரத்திற்கு மணல் கொள்ளை

Published On 2023-04-11 14:45 IST   |   Update On 2023-04-11 14:45:00 IST
  • ஒடுகத்தூர் பகுதியில் நீரோட்ட பாதையை மாற்றி துணிகரம்
  • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

அணைக்கட்டு:

ஒடுகத்தூர் பகுதிகளில் உருவாகும் உத்திரகாவேரி ஆற்றில் 20 கி.மீ தூரம் வரை நடக்கும் மணல் கொள்ளை நடந்துள்ளது. இதனை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்திரகாவேரி ஆறு

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த மேலரசம்பட்டு முதல் அகரம் வரை உள்ள சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் செல்லும் உத்திர காவிரி ஆற்றில் இரவும், பகலுமாக மணல் கொள்ளை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு போலீசார் மூலம் கடும் தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் ஆற்றின் நீரோட்டப் பாதையை மாற்ற மணல்களால் அங்கங்கே தடுப்புகள் ஏற்படுத்தி நீரோட்டப் பாதையை மாற்றி மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் கடும் பாதிப்புக்குள்ளாகும் என அச்சத்தில் உள்ளனர்.

மேலும் மணல் கொள்ளையில் ஈடுபடும் கும்பல் ஆற்றங்கரை ஓரங்களில் மணல் கொள்ளை அடிப்பதற்கு என்று தனி பாதை அமைத்தும் உத்திர காவிரி ஆறு முழுவதும் ஆங்காங்கே மணல் குவியல் குவியலாக சேர்த்து அவற்றை பகல் நேரங்களில் சளித்தும் இரவு நேரங்களில் சாவகாசமாக வந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டும் வருவதாக கூறப்படுகிறது.

இதனால் இன்னும் சில மாதங்களில் துவங்க உள்ள மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகுவார்கள் என கூறப்படுகிறது.

மேலும் இதேபோன்று கடந்த ஆண்டு உத்திர காவிரி ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் வெட்டிய பள்ளங்களில் குளிக்கச் சென்ற 2 சிறு குழந்தைகள் மணல் புதையில் சிக்கி பலியானது அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்ப்படுத்தியது.

அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆற்று மணல் சுரண்டப்படுவதால் நீர்மட்டம் குறைந்து வெயில் காலங்களில் ஒடுகத்தூர் சுற்றுப்பகுதியில் குடிநீருக்கே பஞ்சம் விளைவிக்கும் நிலைக்கு தள்ளப்படும் எனவும், விவசாயம் வெகுவாக பாதிக்கப்படும் எனவும் விவசாயிகளுக்கு பொதுமக்களும் வேதனை தெறிவிக்கின்றனர்.

மணல் கொள்ளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

கடந்த ஆண்டு மழைக்காலங்களில் இதே போல் மணலுக்கு தோண்டப்பட்டு இருந்த குழியில் ஆற்றில் குளிக்க போன 2 குழந்தைகள் குழியில் மாட்டி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News