உள்ளூர் செய்திகள்

 கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் குழு விற்பனை ஸ்டாலில் அலங்கார தட்டுகள் விற்பனைக்கு வைத்துள்ள காட்சி.

ஆரோக்கியம் தரும் கீரைகள், காய்கறி திண்பண்டங்கள் விற்பனை

Published On 2022-12-05 15:33 IST   |   Update On 2022-12-05 15:33:00 IST
  • சிப்பி காளான் பிரியாணி, மாப்பிள்ளை சம்பா கஞ்சி, நவதானிய புட்டு என வகைவகையாக உள்ளது
  • களை கட்டும் வேலூர் கலெக்டர் அலுவலகம்

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு கொடுக்க ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் திங்கட்கிழமைகளில் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்படும்.

இது ஒரு புறம் இருக்க தற்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களின் விற்பனை அங்காடி செயல்பட்டு வருவதால் திங்கட்கிழமை தோறும் கலெக்டர் அலுவலக வளாகம் களைகட்டி வருகிறது.

கலெக்டர் அலுவலகத்தில் நுழைவுவாயில் பகுதியில் மகளிர் குழுவினர் விற்பனை ஸ்டால்கள் வைத்துள்ளனர்.

இதில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய மனத்தக்காளி, முடக்கத்தான், பொன்னி, கீழா நெல்லி, தூதுவளை, பிரண்டை கீரைகள், மலை கிராமங்களில் வளர்ந்த செழிப்பான கொய்யா, கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்கீரை, முள்ளங்கி, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம் என இயற்கை காய்கறிகளை விற்பனைக்கு வைத்துள்ளனர்.

இதை தவிர தானிய வகை தின்பண்டங்களுக்கும் பஞ்சமில்லை.

மாப்பிள்ளை சம்பா அரிசி கஞ்சி, சிறுதானிய சிமினி, சிப்பி காளான் சூப், சிப்பி காளான் பிரியாணி, நாட்டு பசும் பாலில் செய்யப்பட்ட பால்கோவா விதவிதமான புட்டு வகைகள் வேர்க்கடலை சுண்டல் என உடலுக்கு ஆரோக்கிய தரும் நவதானிய பொருட்களும் உள்ளன.

மேலும் நவதானியங்களில் இருந்து செய்யப்பட்ட முறுக்கு பிஸ்கட் வகைகள் விற்பனைக்கு வைத்துள்ளனர்.

மகளிர் சுய உதவி குழுவினரால் செய்யப்பட்ட அலங்கார பொருட்களும் இந்த இடத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

பாக்கு மட்டைகளால் செய்யப்பட்ட தட்டு பைகள் திருமண அலங்கார பொம்மைகள் வரவேற்பு தட்டுகள் பெண்களுக்கான ஜாக்கெட் துணி வகைகள் உள்ளன.

திருமண வரவேற்பு தட்டுகள் விலைக்கு மற்றும் வாடகைக்கு வழங்குவதாக மகளிர் குழுக்கள் தெரிவித்தனர்.

இங்கு ஒரு பத்து ரூபாய் முதல் பொருட்கள் விற்பனைக்கு உள்ளது.

திங்கட்கிழமை தோறும் இங்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் பலர் இங்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

Tags:    

Similar News