ஊசூர் அடுத்த புலிமேடு கிராமத்தில் வனப்பகுதியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சியில் மகிழ்ச்சியாக குடும்பத்துடன் விளையாடி பொழுதை கழிக்கும் பொதுமக்கள்.
புலிமேடு காட்டாற்று நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர்
- சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்
- அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் வலியுறுத்தல்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே ஊசூர் அடுத்து அமைந்துள்ளது புலிமேடு கிராமம். இக்கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் உள்ள காட்டாற்றில் பருவமழை காலத்தில் வெள்ளம் ஏற்படும். அச்சமயத்தில் மலைப்பகுதியில் பாறைகளுக்கு இடையே இருந்து வரும் தண்ணீர் சிறு நீர் வீழ்ச்சி போல் ஆர்ப்பரித்து கொட்டியது.
இந்நிலையில் மாண்டஸ் புயல் மற்றும் தொடர் மழை காரணமாக மலையில் இருந்து உருவாகும் காட்டாறில் வெள்ளம் ஏற்பட்டு தற்போது நீர் வர துவங்கியுள்ளது. வேலூரில் இருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் ரம்மியமாய் கொட்டும் காட்டாற்று நீர் வீழ்ச்சியை கண்டு உற்சாக குளியல் போட வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் அண்டைய மாவட்டத்தில் இருந்தும் பொதுமக்கள் குடும்பத்துடன் குவிந்து வருகின்றனர்.
மேலும் முதியோர்கள் இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் குடும்பத்தோடு பொழுது போக்கிற்காக வந்து செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தருகின்றனர். நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் அதிகமான மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
வெயிலுக்கு பெயர் பெற்ற, இயற்கை சுற்றுலா தலங்கள் குறைந்த வேலூர் மாவட்டத்தில் பொழுதுபோக்கிற்காக இயற்கைச் சுற்றுலா தளத்தை தேடி அலையும் மக்களுக்கு பெரும் வரமாக புலிமேடு காட்டாற்று நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இங்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.