புதுச்சேரி ரியல் எஸ்டேட் அதிபர் மர்ம சாவில் கேமராக்கள் மூலம் ஆய்வு
- 4 பேரிடம் விசாரணை
- உடலில் காயங்கள் உள்ளதால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது
வேலூர்:
புதுச்சேரி லாஸ் பேட்டையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சரவணன் (வயது 51). காட்பாடியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது தொடர்பாக விருதம்பட்டு போலீசார் சந்தேக மரணத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இந்த வழக்கில் அரசியல் கட்சி பிரமுகருக்கு நேரடியாக தொடர்பு இருக்கிறது என்றும், அதுகுறித்து முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் புதுச்சேரியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. வைத்தியநாதன் புகார் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முக்கிய அரசியல் கட்சி பிரமுகர் உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும் சரவணனுக்கு கார் ஓட்டிய டிரைவர் ஒருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையை தொடர்ந்து நேற்று 4 பேரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கில் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் அவர்கள் வரவேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இறந்த சரவணனுக்கு உடலில் காயங்கள் உள்ளன. எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. அது வந்தபிறகுதான் இதில் மேலும் தகவல்கள் வெளிவரும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கு சம்பந்தமாக காட்பாடி காந்திநகரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
சரவணன் தங்கி இருந்த பகுதிக்கு வந்து சென்றவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.