உள்ளூர் செய்திகள்

ஆற்று நீர்மூலம் ஏரிகளை நிரம்ப நடவடிக்கை

Published On 2022-11-04 15:14 IST   |   Update On 2022-11-04 15:14:00 IST
  • ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் எதிர்ர்த்த மழை இல்லை
  • கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரம்

வேலூர்:

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல் தொடங்கி பெய்து வருகிறது. எனினும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த 3 நாள்களாக எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை.

இதனிடையே, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நீர்வளத் துறைக் கட்டுப் பாட்டிலுள்ள 519 ஏரிகளில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் 101 ஏரிகள் உள்ளன. இவற்றில், 12 ஏரிகள் மட்டுமே முழு மையாக நிரம்பியுள்ளன. 5 ஏரிகளில் 50 முதல் 75 சதவீத அளவுக்கும், 60 ஏரிகளில் 25 முதல் 50 சதவீதம் வரையும் தண்ணீர் இருப்பு உள்ளன. 24 ஏரிகளுக்கு நீர்வரத்து சிறிதுகூட இல்லை.

இதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 49 ஏரிகளில் 29 ஏரிகள் நிரம்பிவிட்டன. அங்கு 4 ஏரிகளுக்கு மட்டும் நீர்வரத்து இல்லை.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 369 ஏரிகளில் 125 ஏரிகள் மட்டுமே நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. 145 ஏரிகளில் 50 சதவீதம் வரை தண்ணீர் இருப்பதுடன், தொடர்ந்து இந்த ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. 30 ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லை என நீர்வளத் துறை புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

அதன்படி, முழுமையாக நிரம்பாமல் உள்ள ஏரிகளுக்கு பாலாறு, மோர்தானா, ராஜாதோப்பு அணை கால்வாய்கள் மூலம் தண்ணீரை திருப்பிவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியது:-

தென் மேற்குப் பருவமழை எதிர்பார்த்ததைவிட அதிகமாக பெய்ததால், ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் 80 சதவீத அளவுக்கு நிரம்பின. ஆனால், வடகிழக்குப் பருவ மழை வழக்கத்தைவிட குறைவாகவே பெய் துள்ளதுடன், ஆந்திர மாநில வனப் பகுதியில் மழை பொழிவே இல்லை. இதனால், பாலாற்றில் தற்போது வினாடிக்கு 400 கன அடி அளவுக்கே தண்ணீர் செல்கிறது.

அதிக அளவில் மழை பெய்யும் என எதிர் பார்க்க முடியாததால், பாலாறு, மோர்தானா, ராஜாதோப்பு அணைக் கால்வாய்கள் மூலம் நீர்ஆதாரம் உள்ள அனைத்து ஏரிகளையும் 100% நிரப்ப அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான ஏரிகள் ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு இல்லாமல் மழை நீரையும், ஓடை நீரையும் மட்டுமே நம்பியுள்ளன. இவற்றில் பல ஏரிகளில் தென்மேற்குப் பருவமழை காரணமாக 50 சதவீதம் நீர் இருப்பு உள்ளன.

தொடர்ந்து, மழை பெய்யும்பட்சத்தில் அந்த ஏரிகளுக்கும் நீர்வரத்து ஏற்பட அதன் நீர்வழிப் பாதைகள் தூர்வாரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றனர்.

Tags:    

Similar News