வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திறக்கப்பட்ட சர்வீஸ் சாலைக்கு திரும்பும் வாகனங்கள்.
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மூடப்பட்ட சர்வீஸ் சாலை திறப்பு
- சத்துவாச்சாரியில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது
- பொதுமக்கள் பாராட்டு
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சென்னை- பெங்களூரு சாலையில் மூடப்பட்டிருந்த தடுப்புகள் நேற்று அகற்றப்பட்டது. இதனை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார்.வேலூர் புதிய பஸ்நிலையத்தில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன.
இதனால் கிரீன்சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமானது. அதனை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டன. வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கிரீன்சர்க்கிள் பகுதிக்கு வாகனங்கள் வருவதை தவிர்க்கும் வகையில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் சர்வீஸ் சாலை இணைப்பு பகுதி தடுப்புகள் வைத்து மூடப்பட்டது.
வேலூர் புதிய பஸ்நிலையம், காட்பாடிக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் கிரீன் சர்க்கிளை அடுத்துள்ள சர்வீஸ் சாலை வழியாக சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் சென்று புதிய பஸ்நிலையம், காட்பாடி, சென்னை நோக்கி செல்லும் வகையில் போக்குரத்து மாற்றப்பட்டது. அதனால் கிரீன்சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது. ஆனால் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சத்துவாச்சாரி பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் வாகனங்களின் வரத்து அதிகரித்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சர்வீஸ் சாலை திறப்பு
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மூடப்பட்ட சென்னை- பெங்களூரு சர்வீஸ் சாலை வழியாக இருசக்கர, ஆட்டோ, கார்கள் செல்லும் வகையில் பாதை ஏற்படுத்தி, அதனை திறக்க வேண்டும் என்று வணிகர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் மூடப்பட்ட சர்வீஸ்சாலை நேற்று திறக்கப்பட்டது. பைக்குகள், ஆட்டோ, கார் ஆகியவை மட்டும் செல்லும் வகையில் பாதை ஏற்படுத்தப்பட்டன. இதனை வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உதவிகலெக்டர் பூங்கொடி, துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், போக்குவரத்து போலீசார் உடனிருந்தனர்.
சர்வீஸ் சாலை வழியாக பைக்குகள், ஆட்டோ, கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் செல்லும் வகையில் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வழியாக டெம்போ, பஸ் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது என்று நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.
தேசிய நெடுஞ்சாலையில் வரும் லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சர்வீஸ் ஆலையில் திரும்புவதற்கு முயற்சிக்கின்றனர் அங்குள்ள போக்குவரத்து போலீசார் கனரக வாகனங்களை மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
சத்துவாச்சாரியில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது
சர்வீஸ் சாலை இணைப்பு தடுப்பு அகற்றப்பட்டதால் சத்துவாச்சாரியில் தற்போது போக்குவரத்து நெரிசல் குறைந்தது. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.