உள்ளூர் செய்திகள்

காட்பாடி வாலிபர் கொலையில் மெரினா கடற்கரையில் பதுங்கி இருந்த ஒருவர் கைது

Published On 2022-12-16 15:42 IST   |   Update On 2022-12-16 15:42:00 IST
  • 2 பேர் கோர்ட்டில் சரண்
  • 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த செங்குட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 22) என்பவரை அவருடைய நண்பர்கள் முன்விரோத தகராறில் கடந்த திங்கட்கிழமை வெட்டிகொலை செய்து புதைத்துவிட்டனர். மேலும், கொலை செய்யும் காட்சியை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான புகாரின்பேரில் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

சந்தேகத்தின்பேரில் வெங்கடேசனின் நண்பர்கள் திவாகர், சதீஷ் ஆகியோரை பிடித்து விசாரித்தபோது, வெங்கடேசனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதுடன் கஞ்சா விற்பனை பணம் கொடுத்தல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோத தகராறில் கொலை செய்ததாக கூறியுள்ளனர்.

இதையடுத்து, வெங்கடேசன் கொலை வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்யும் பணியில் தனிப்படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

மெரினா கடற்கரையில் பதுங்கிய வாலிபர் கைது.

கரிகிரி சூர்யா, டப்பா மணி என்ற மணிகண்டன் ஆகியோர் வேலூர் கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர்.

இதற்கிடையில், சேவூர் அந்தோணி என்பவர் சென்னையில் பதுங்கி இருக்கும் தகவலின்பேரில் தனிப்படை போலீசார் சென்னை சென்றனர். அப்போது, சென்னை மெரினா காடற்கரையில் பதுங்கியிருந்த அந்தோணியை பிடிக்க முயன்றபோது தப்பி ஓட முயற்சித்துள்ளார். அவரை போலீசார் விரட்டிச் சென்றனர்.

இதைப் பார்த்த பொதுமக்கள் சிலர் அந்தோணியை மடக்கி பிடித்து ஒப்படைத்தனர். இதனால், மெரினா கடற்கரையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிடிபட்ட அந்தோணியை வேலூருக்கு நேற்றிரவு அழைத்து வந்தனர்.

வெங்கடேசன் கொலையில் மொத்தம் 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. சரணடைந்துள்ள 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags:    

Similar News