உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையொட்டி வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்ட காட்சி.

வேலூரில் கள ஆய்வில் முதல்-அமைச்சர் திட்டத்தில் மு.க. ஸ்டாலின் 2 நாட்கள் ஆய்வு

Published On 2023-01-31 15:21 IST   |   Update On 2023-01-31 15:21:00 IST
  • நாளை ரெயில் மூலம் வருகிறார்
  • கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூடுதல் கேமராக்கள் பொருத்தம்

வேலூர்:

வேலூரில் கள ஆய்வில் முதல்அமைச்சர் திட்டத்தின் கீழ் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் ஆய்வு செய்கிறார்.

இதற்காக நாளை பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து சீரடி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் காட்பாடிக்கு வருகிறார். அவருக்கு வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அங்கிருந்து காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

அங்கு தமிழகத்தில் ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தினை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 55 பள்ளிகளில் ரூ.15. 96 கோடியில் 114 புதிய கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

விழா முடிந்ததும் தனியார் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடுகிறார்.

இதனைத் தொடர்ந்து வேலூர் மாநகராட்சி பகுதியில் திடீரென கள ஆய்வு பணியில் ஈடுபடுகிறார். அவர் எந்த இடத்தில் ஆய்வு செய்ய உள்ளார் என்பது தெரிவி க்கப்படவில்லை.

மாலை 5 மணிக்கு வேலூர் விஐடி பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார்.அங்கு கலைஞர் கருணாநிதி பெயரில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து பேசுகிறார். இந்த விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, காந்தி, வி.ஐ.டி. வேந்தர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

விழா முடிந்ததும் மு.க ஸ்டாலின் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வருகிறார். அங்கு காவல்துறை அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு குறித்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் வடக்கு மண்டல ஐ.ஜி டாக்டர் கண்ணன், வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஷ் கண்ணன் (வேலூர்) டாக்டர் கார்த்திகேயன் (திருவண்ணாமலை) டாக்டர் பாலகிருஷ்ணன் (திருப்பத்தூர்) டாக்டர் தீபா சத்யன் (ராணிப்பேட்டை) உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

நாளை இரவு மீண்டும் தனியார் ஓட்டலில் சென்று தங்குகிறார்.

2-வது நாள் அதாவது 2-ந் தேதி காலை வேலூர் கலெக்டர் அலுவலக த்தில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டருடன் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெறும் மற்றும் நடைபெற உள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஆய்வு கூட்டம் முடிந்ததும் மீண்டும் ரெயில் மூலம் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வேலூர் கலெக்டர் அலுவலக பகுதியில் தூய்மைப்படுத்தப்பட்டு தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டன.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூடுதல் மின்விளக்குகள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

முதல்அமைச்சர் வருகையையொட்டி வேலூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வேலூர் காட்பாடி உள்ளிட்ட மாநகரப் பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Tags:    

Similar News