உள்ளூர் செய்திகள்

வேலூர் சாலைகளில் உள்ள தலைவர்கள் சிலைகளை அகற்ற வேண்டும்

Published On 2022-10-17 09:51 GMT   |   Update On 2022-10-17 09:51 GMT
  • கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு மனு
  • ஐகோர்ட்டு உத்தரவுபடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் இருந்து வந்து பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

சிவசக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் வேலூர் கோபால் ஜி தலைமையில் மனு அளித்தனர். அதில் சென்னை ஐகோர்ட்டு சாலைகளில் உள்ள தலைவர்களின் சிலைகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து சாலைகள் மற்றும் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள தலைவர்கள் சிலைகளை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

வேலூர் கீழ்மொணவூர் ஊராட்சி அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் பாண்டியன் என்கிற ரவீந்திரன் மனு அளித்தார்.

அதில் எனது வாடுக்கு உட்பட்ட கீழ் மொணவூர், மேல்மொணவூர் ஊராட்சியில் விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் 38 பேர் உள்ளனர். அவர்கள் வாழ வழி இல்லாமல் வறுமையில் தவிக்கின்றனர். அவர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

பொன்னை அருகே உள்ள பி. என். பாளையம் அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். அதில் எங்கள் பகுதியில் 80 குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இதில் 30 குடும்பத்தினருக்கு 1.50 சென்ட் இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கினார்கள். இதனை 3 சென்ட் நிலமாக உயர்த்தி பட்டா வழங்க வேண்டும் என கூறியிருந்தனர். ‌

Tags:    

Similar News