ஸ்ரீ நாராயணி நர்சிங் கல்லூரியில் தீபம் ஏற்றும் விழா நடந்த காட்சி. மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பாலாஜி, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் கண்ணகி, கல்லூரி முதல்வர் பிரபா பங்கேற்றனர்.
கடின உழைப்புடன் விடா முயற்சி இருந்தால் வாழ்க்கையில் சாதிக்கலாம்
- நாராயணி நர்சிங் கல்லூரியில் தீபம் ஏற்றும் விழா நடந்தது
- மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் பேச்சு
வேலூர்:
வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி நர்சிங் கல்லூரியில் புதியதாக சேர்ந்த மாணவிகளுக்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நாராயணி மகாலில் இன்று நடந்தது.
இந்நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் பிரபா வரவேற்புரையாற்றினார். நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி தொடக்க உரையாற்றினார்.
நர்சிங் கல்லூரி இணை இயக்குனர் லலிதா புருஷோத்தமன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி பேசினார்.
சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கண்ணகி கலந்து கொண்டு பேசியதாவது:-
பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரி படிப்பிற்கு வந்துள்ள உங்களுக்கு இங்கு நடத்தப்படும் பாடம் புதியதாக தோன்றும். பேராசிரியர்கள் பாடம் நடத்தும் போது உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
கடின உழைப்பு விடா முயற்சி இருந்தால் மேன்மேலும் வாழ்க்கையில் சாதனைகளை படைக்க முடியும். நீங்கள் பி.எஸ்.சி முடித்து எம்.எஸ்.சி, பி.எச்.டி என படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
பேராசிரியர்கள் நடத்தும் பாடத்தில் சந்தேகம் இருந்தால் அப்போதே சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். மாணவர்கள் மனநிலையை ஒருமுகப்படுத்தி பாடங்களை கவனிக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற முடியும். பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுக்கு உறுதுணையாக இருந்து ஊக்கப்படுத்த வேண்டும்.
மாணவர்கள் விடுமுறை எடுக்க வேண்டும் என்ற எண்ணமே வரக்கூடாது. நீங்கள் நன்றாக படித்து படித்த கல்லூரிக்கும் பெற்றோருக்கும் நல்ல பேரை பெற்று தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கல்லூரி துணை முதல்வர் காந்திமதி பிளாரன்ஸ் நைட்டிங்கேல அம்மையார் உறுதி மொழியை வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து புதியதாக கல்லூரியில் சேர்ந்த மாணவிகள் தீபம் ஏற்றினர். நர்சிங் கல்லூரி கூடுதல் துணை முதல்வர் சுதா நன்றி கூறினார்.