மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அதிகாரம் இல்லை
- கதிர்ஆனந்த் எம்.பி. கேள்விக்கு மத்திய மந்திரி பதில்
- அறிக்கை மீதான விவாதம் ஒத்திவைக்கப்பட்டது
வேலூர்:
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கோ, காவிரி படுகையில் வேறெந்த திட்டத்தையும் நிறைவேற்றுவதற்கோ கர்நாடக அரசுக்கு தன்னிச்சையாக எவ்வித அதிகாரமுமில்லை என வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் கேள்விக்கு மத்திய நீர்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கம் அளித்துள்ளார்.
வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் நாடாளுமன்றத்தில் விதி எண் 377-இன் கீழ் ''தமிழக விவசாயிகளை பாதிக்கும் வகையில் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இது தமிழகத்துக்கு செய்யும் மிகப்பெரிய அநீதியாகும். பெங்களூரு மாநகரின் குடிநீர் பயன்பாட்டுக்காக காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க அனுமதி அளித்துள்ள நிலையில் பெங்களூருவில் இருந்து வெகு தொலைவில் உள்ள மேகதாதுவில் பெரிய நீர்த்தேக்கம் கட்டப்படுவதாகக் கூறப்படும் காரணத்தை ஏற்க முடியாது.
பெங்களூரு மாநகர குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஏற்கனவே போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ள நிலையில், 4.75 டிஎம்சி குடிநீருக்காக மேகதாதுவில் 67.16 டிஎம்சி கொள்ளளவு நீர்த்தேக்கம் தேவை என்பது எவ்வகையிலும் நியாயமல்ல.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக, இதை மத்திய பாஜக அரசு தடுக்க வில்லை. தமிழக விவசாயிகளின் வாழ்வுரிமையை பாதிக்கும் மேகதாது அணை பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். மேகதாதுவில் எப்போதும் அணை கட்ட முயற்சி எடுக்கக் கூடாது என கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்'' என வலியுறுத்தியிருந்தார்.
இது தொடர்பாக மத்திய நீர்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அனுப்பியுள்ள கடிதத்தில், ''கர்நாடக மாநில அரசு 2019-ம் ஆண்டு ஜனவரியில் மத்திய நீர் ஆணையத்திடம் சமர்ப்பித்த மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கை கருத்துகள் பெறவேண்டி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் பல்வேறு கூட்டங்களில் மேகதாது அணை தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாததால் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கை மீதான விவாதம் ஒத்திவைக்கப்பட்டது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 18-வது கூட்டத்தில் உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை மேகதாது திட்டம், காவிரி படுகையில் உள்ள வேறு எந்தத் திட்டத்திலும் விவாதித்து முடிவு எடுப்பதை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஒத்தி வைக்க வேண்டும் என்ற தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அதனை ஏற்று பிப்ரவரி 10-ந்தேதி நடைபெற்ற 19-வது கூட்டத்திலும் இந்த விவகாரம் மீதான விவாதம் தவிர்க்கப்பட்டது'' என தெரிவித்துள்ளார்.