கொள்ளை நடந்த வீடு. பீரோவில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்த காட்சி.
பள்ளிகொண்டா அருகே நகை, பணம், அரிசி மூட்டை கொள்ளை
- வீட்டின் கதவை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் ராஜாஜி பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது 43). இவர் பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இன்று காலை இவர் குடும்பத்துடன் பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. அதிலிருந்த 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரம், ஒரு ஜோடி வெள்ளி குத்து விளக்கு மற்றும் அரிசி மூட்டையை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து சுந்தரராஜன் பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.