வேலூரில் பயணியிடம் 5 பவுன் நகை திருட்டு
- புதிய பஸ் நிலையத்தில் தொடரும் சம்பவம்
- கண்காணிப்பு பணியை தீவிரபடுத்த வேண்டும்
வேலூர்:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த வன்னிவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப்குமார்.
இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்றார். பிரதீப்குமார் தனது மனைவி மற்றும் மாமியாரை அழைத்துக் கொண்டு மீண்டும் அங்கிருந்து வேலூர் வருவதற்காக, திருப்பதி செல்லும் பஸ்சில் பயணம் செய்தார்.
அதன்படி பஸ் அதிகாலை 4.30 மணியளவில், வேலூர் புதிய பஸ் நிலையம் வந்தடைந்தது. அங்கு பிரதீப்குமாரின் மனைவி மற்றும் மாமியார் ஆகியோர் கழிவறைக்குச் சென்றனர். பிரதீப் குமார் தனது கை குழந்தையை கையில் வைத்துக் கொண்டு, தான் கொண்டு வந்த பைகளையும் கீழே வைத்திருந்தார்.
அப்போது அவர் பையில் வைத்திருந்த 5 பவுன் நகையை திருடி கொண்டு அங்கிருந்து தப்பி விட்டார். என்ன செய்வது என தெரியாமல் பதறிப்போன பிரதீப்குமார், இது குறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று, புதிய பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளிடம், நகை திருட்டு சம்பவம் தொடர்ந்து நடக்கிறது.
எனவே புதிய பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியை தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.