உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் நகராட்சி கடைகளில் வரி வசூல் தீவிரம்

Published On 2022-12-08 15:46 IST   |   Update On 2022-12-08 15:46:00 IST
  • 2 வாரத்தில் ரூ.1 கோடி வசூலானது
  • கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை

குடியாத்தம்:

குடியாத்தம் நகராட்சியில் வீட்டு வரி, கடை வரி, வணிக நிறுவனங்களின் வரி, வாடகை வரி, தொழில் வரி, குடிநீர் வரி என கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி வரை குடியாத்தம் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரிப்பாக்கி ரூ.10 கோடியே 18 லட்சம் நிலுவையில் இருந்தது.

10 கோடி ரூபாய்க்கு மேல் வரி பாக்கி இருந்ததால் குடியாத்தம் நகராட்சி பொதுமக்களுக்கு நகராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தர நிதி பற்றாக்குறையால் மிகவும் சிரமங்களை சந்தித்து வருகிறது.

இதற்காக வரிவசூலில் தீவிரம் காட்டும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கினார்கள்.

வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பி. குபேந்திரன் உத்தரவின் பேரில், குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் ஆலோசனை பேரில் குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு தலைமையில் நகராட்சி மேலாளர் சுகந்தி, வருவாய் ஆய்வாளர் யுவராஜ் மற்றும் வருவாய் உதவியாளர்கள் கொண்ட வரிவசூல் குழுக்கள் அமைக்கப்பட்டு குடியாத்தம் பகுதியில் கடந்த 2 வாரமாக தீவிரமாக வரி வசூலில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக சுமார் ஒரு கோடி ரூபாய் வரி வசூல் ஆனதாக நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி சார்பில் தீவிர வரி வசூல் தொடர்ந்து நடைபெறும் எனவும், அதிக வரி பாக்கி வைத்துள்ளவர்களின் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News