உள்ளூர் செய்திகள்

வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல குழு கூட்டத்தில் கவுன்சிலர் சுதாகர் பாதாள சாக்கடை பணிகள் குறித்த படங்களை வீசி எறிந்த காட்சி.

வேலூர் சத்துவாச்சாரியில் பாதாள சாக்கடை பணி தாமதம் புகைப்படங்களை வீசி எறிந்த கவுன்சிலர்

Published On 2022-07-15 15:42 IST   |   Update On 2022-07-15 15:42:00 IST
  • 2-வது மண்டல குழு கூட்டத்தில் பரபரப்பு
  • 25 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

வேலூர்:

வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல குழு கூட்டம் மண்டல குழு தலைவர் நரேந்திரன் தலைமையில் நடந்தது.இதில் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் கவுன்சிலர்கள் ஆர்.பி‌. ஏழுமலை, சதீஷ்குமார் பாச்சி, நியமன குழு உறுப்பினர் கணேஷ்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 24-வது வார்டு கவுன்சிலர் சுதாகர் பேசுகையில்:-

என்னுடைய வார்டில் 3 வருடத்திற்கு மேலாக பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஆவேசமாக பேசினார். மேலும் அவர் கொண்டு வந்த புகைப்படங்களை வீசி எறிந்தார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

26 -வது வார்டு கவுன்சிலர் சேகர் சத்துவாச்சாரி 57 முதல் 64 வரை உள்ள தெருக்களில் குடிநீர் வசதி செய்யப்படவில்லை. மேலும் நாளுக்கு நாள் நாய்கள், பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

எனது வார்டில் கால்வாய் மற்றும் சாலை வசதி அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிவறைகள் சுத்தம் செய்ய பணியாளர்கள் வேண்டுமென கேட்டிருந்தனர். அதனை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் பேசிய மேயர் சுஜாதா மாநகராட்சி பகுதியில் அனைத்து வசதிகளும் துரிதமாக நடந்து வருகிறது. விரைவில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து முடிக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் 2-வது மண்டலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து 25 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News