சாராய தொழிலில் இருந்து விடுபடுபவர்களுக்கு தொழில் தொடங்க உதவி
- போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பேட்டி
- வங்கிகளில் கடன் உதவி பெற்று தரப்படும்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லிங்குன்றம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் விற்பதை தடுக்க கோரி கொட்டும் மழையில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் லிங்குன்றம் கிராமத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், பாண்டியன் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.
தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் அளித்த பேட்டியில் கூறியதாவது-
குடியாத்தம் மற்றும் பேராணம்பட்டு பகுதியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் விற்பவர்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
சாராய காய்ச்சுவது மற்றும் விற்பவர்களை அழைத்து இனி சாராயத் தொழில் ஈடுபடக்கூடாது என அறிவுரை வழங்கப்படும். தொடர்ந்து இத்தொழிலில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சாராய தொழிலில் இருந்து விடுபடுபவர்களின் வாழ்வாதாரத்திற்காக காவல்துறை சார்பில் தமிழக அரசின் உதவியுடன் தொகுப்பு வீடுகள் கட்டித் தரவும், வங்கி கடனுதவி, கறவை மாடுகள் வளர்க்கவும், சிறு தொழில் புரிய கடன் உதவி பெற்று தரப்படும் இத்தொழிலில் இருந்து விடுபடும் குடும்பத்தினரின் குழந்தைகள் கல்விக்காக அனைத்து உதவிகளும் போலீஸ் முன்வந்து செய்து தரப்படும் கள்ளச்சாராய காய்ச்சுவது மற்றும் விற்பது தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.