வேலூரில் பகலில் கனரக வாகனங்கள் நுழைய தடை
- இன்று முதல் அமல்
- கலெக்டர் உத்தரவு
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மாநகரத்துக்குள் கனரக சரக்கு வாகனங்கள் நுழைவது இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தடைசெய்யப்படுகிறது.
சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து வேலூர் மாநகருக்குள் நுழையும் அனைத்து கனரக சரக்கு வாகனங்கள் வேலூர் கிரீன் சர்க்கிள் சாலையில் இருந்து அப்துல்லாபுரம் விமான நிலையம் வழியாக ஊசூர், அரியூர், சாத்துமதுரை, திருவண்ணாமலை மார்க்கமாக செல்ல வேண்டும்.
வேலூர் பழைய பைபாஸ் சாலை மற்றும் பழைய காட்பாடி சாலை ஆகியவற்றில் கனரக சரக்கு வாகனங்கள் செல்வது தடைசெய்யப்படுகிறது.
அதுபோல் திருவண்ணாமலையில் இருந்து வேலூர் நோக்கி வரும் அனைத்து கனரக சரக்கு வாகனங்கள் சாத்துமதுரை, அரியூர், ஊசூர் வழியாக அப்துல்லாபுரம் விமான நிலையம் அடைந்து அவரவர் வழித்தடங்களில் பயணிக்க வேண்டும். இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை மேற்கண்ட கட்டுப்பாடுகள் ஏதுமின்றி வழக்கமான பாதையினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.