நிரந்தர ஓய்வறை இல்லாமல் டிரைவர்கள், கண்டக்டர்கள் அவதி
- வேலூர் புதிய பஸ் நிலையத்தில் அவலம்
- கழிவறைகளை இலவசமாக பயன்படுத்துவதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை
வேலூர்:
வேலூரில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்9.25 எக்டேர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் உள்ளது. இது ரூ.53.13 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது.
இங்கு 84 பஸ் பிளாட்பாரங்கள் , 83 கடைகள், 3 உணவு விடுதிகள், 11 காத்திருப்பு அறைகள் மற்றும் 2 லிப்ட்கள் உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு தனி ஓய்வு அறைகள் மற்றும் சாய்வுதளங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் அருகே பல அடுக்கு வாகன நிறுத்துமிடமும் உள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் 560-க்கும் மேற்பட்ட பஸ்கள் மற்றும் பெங்களூரு, கோயம்புத்தூர், சென்னை, சேலம், திருப்பதி, புதுச்சேரி மற்றும் திருச்சி போன்ற முக்கிய நகரங்களுக்கு இடையே இயங்கும் தனியார் பஸ்கள் நிறுத்தும் இடமாக இந்தப் புதிய பஸ் நிலையம் உள்ளது
சராசரியாக, தினமும் 75,000-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்கு 1,200-க்கும் மேற்பட்ட பஸ் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
சுகாதாரமற்ற குடிநீர் , கட்டண கழிப்பறைகள் , இரவு நேரங்களில் தங்குவதற்கு ஓய்வு அறைகள் இல்லாதது போன்றவைகளால் போக்குவரத்து ஊழியர்கள், குறிப்பாக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பாதிக்கப்படு கின்றனர்.
மேலும் அங்குள்ள கழிவறைகள் தனியார் ஒப்பந்ததாரர்களால் பராமரிக்கப்படுகிறது. இதனால் பணியாளர்கள் இலவசமாக பயன்படுத்து வதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை.
இந்தநிலையில் பஸ் பணியாளர்களுக்கு கழிப்பறைகளை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிவு றுத்தினார். இருப்பினும் இலவசமாக பயன்படுத்த அனுமதிப்பதில்லை என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.