வேலூர் மாநகராட்சியில் 4 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம் மையங்கள்
- 8 ரூபாய்க்கு 20 லிட்டர் சுத்தமான குடிநீர் கிடைக்கும்
- ரீசார்ஜ் செய்யும் வசதி கொண்ட ஸ்மார்ட் அட்டை வழங்கப்பட உள்ளது
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் முதல் முயற்சியாக 4 முக்கிய இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் ஏடிஎம் மையம் அமைக்கப்பட உள்ளது. இங்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ரூ.8 விலைக்கு ஸ்மார்ட் அட்டை மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
வேலூர் மாநகராட்சி 60 வார்டுகளுடன் மக்கள் தொகை சுமார் 8 லட்சமாக இருக்கிறது. மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவை காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பெரும்பாலும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. வேலூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புதிய பகுதிகளில் காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக மாநகராட்சியில் பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குறைந்த விலையில் விற்பனை செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தனியார் நிறுவனத்தின் மூலம் இதற்கான முன் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
வேலூர் மாநகராட்சியில் முதல் முயற்சியாக 4 முக்கிய இடங்களில் சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. காட்பாடி உழவர் சந்தை அருகில், சிஎம்சி மருத்துவமனை அருகில், பழைய மீன் மார்க்கெட் அருகில், புதிய பஸ் நிலையம் அருகில் என 4 இடங்களில் இந்த சுத்திகரிக்கப்பட்ட ஏடிஎம் மையங்கள் அமைய உள்ளன.
இங்கு தாகத்துக்காக வரும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவசமாகவும் 20 லிட்டர் பாட்டிலில் எடுத்துச்செல்ல கட்டணமும் வசூலிக்க உள்ளனர். பணம் கொடுத்து தண்ணீர் வாங்கிச் செல்பவர்களின் வசதிக்காக ரீசார்ஜ் செய்யும் வசதி கொண்ட ஸ்மார்ட் அட்டையும் வழங்க உள்ளனர்.
ஒவ்வொரு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஏடிஎம் மையமும் 1,050 சதுரடி பரப்பளவு கொண்டதாக அமையும். இங்கு தினமும் 24 ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டேங்க் ஒன்று மூலம் சேமிக்கப்பட்டு விநியோகம் செய்ய உள்ளனர்.
மேலும் மின்சாரம் துண்டிப்பு உள்ளிட்ட நேரங்களில் அவசர தேவைக்காக 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய டேங்க் மூலமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தயாராக வைத்திருக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
8 ரூபாய்க்கு 20 லிட்டர்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஏடிஎம் மையங்களில் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேன் தண்ணீர் 8 ரூபாய்க்கு ஸ்மார்ட் கார்டு மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து, வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் கூறுகையில் வே ''முதல் கட்டமாக 4 இடங்களில் குடிநீர் ஏடிஎம் மையம் தொடங்க உள்ளோம். அதன் பிறகு ஒவ்வொரு வார்டிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஏடிஎம் மையம் தொடங்கப்படும்.
வார்டுகளில் ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளைக்கு 40 லிட்டர் தண்ணீர் வீதம் விநியோகம் செய்யப்படும். இதற்காக 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ரூ.8 விலை என தற்போதைக்கு நிர்ணயித்துள்ளோம்.
குடும்ப நிகழ்ச்சிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தேவை இருந்தால் அந்த வார்டு கவுன்சிலர் மூலம் பரிந்துரை கடிதம் கொடுத்தால் அவர்களுக்கு 100 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் 40 ரூபாய்க்கு கொடுக்கப்படும்.
குடிநீர் ஏடிஎம் மையங்களுக்கு அருகில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படும். குடிநீர் உற்பத்தி, பராமரிப்பு, விநியோக பணி முழுவதும் தனியார் நிறுவனம் மேற்கொள்ளும். இதற்காக முதல்தர நிறுவனம் தேர்வு செய்யப்பட உள்ளது என்றார்.