வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணி வண்ணனிடம் தி.மு.க.வினர் மனு அளித்த காட்சி
மதுரை அ.தி.மு.க மாநாட்டில் தி.மு.க. தலைவர்களை அவமானப்படுத்தியதாக எஸ்.பி. அலுவலகத்தில் புகார்
- கொலை மிரட்டல் விடுத்ததை அதிமுகவினர் ரசித்தனர்
- குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் குடியாத்தம் அமுலு விஜியன் எம்.எல்.ஏ. தலைமையில் மேயர் சுஜாதா வேலூர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. அவைத் தலைவர் முகமது சகி உள்ளிட்ட திமுகவினர் மனு அளித்தனர்.
அதில் கூறி இருப்பதாவது, மதுரையில் நடந்த அ.தி.மு.க மாநாட்டில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சரையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எம்.பி. கனிமொழி கருணாநிதி ஆகியவர்களை ஆபாசமாகவும் அவதூறாகவும் பாட்டு பாடியும் பேசி கொலை மிரட்டல் விடுத்து மிரட்டியதை முன் வரிசையில் அமர்ந்து அனைத்து அதிமுக தலைவர்களும் அதனை ரசித்து ஏளனமாக கைத்தட்டி சிரித்து வந்தனர்.
லட்சக்கணக்கான அதிமுகவின் தொண்டர்கள் முன்னிலையில் இப்படி பேசியது மட்டுமல்லாமல் அதனை அவர்களது தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பினார்கள்.
பொதுவெளியில் அரசியல் தலைவர்களை விமர்சனம் என்ற பெயரில் தனிமனித சுதந்திரத்தை கொச்சைப்படுத்தியும், உண்மைக்கு மாறான தனிப்பட்ட முறையில் ஆபாசமாகவும், அவதூராகவும் அநாகரிகமாகவும் கொலை மிரட்டல் விடுத்து வேண்டுமென்றே பேச வைத்து பாட்டு பாட வைத்து அதனை ரசித்த அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநாடு நடத்திய நிர்வாகிகள், பாடலை பாடிய நபர்கள் மீது பொது நலனுக்கு குந்தகம் மற்றும் மேற்படி சட்டத்துக்கு புறமான செயலை செய்த நிர்வாகிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.