வேலூரில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பேசிய காட்சி.
வேலூரில் இருந்து காட்பாடிக்கு நேரடியாக செல்ல மேம்பாலம்
- மத்திய மந்திரியிடம் வணிகர்கள் வலியுறுத்தல்
- விமான நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
வேலூர்:
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே.சிங் இன்று வேலூர் மாநகர வணிகர் சங்க நிர்வாகிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது வணிகர் சங்கங்கள் சார்பில் அவருக்கு மரியாதை செய்யப்பட்டது. மேலும் வணிகர்கள் சங்கம் சார்பில் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். அப்போது வணிகர்கள் கூறியதாவது:-
வேலூரில் இருந்து காட்பாடி செல்லும் வகையில் நேரடியாக மேம்பாலம் ஒன்று அமைக்க வேண்டும். கிரீன் சர்க்கிள் அளவை குறைக்க வேண்டும். கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் ெரயில்வே மேம்பாலம் கொண்டு வர வேண்டும்.
சித்தூர் கடலூர் சாலையை அகலப்படுத்துவதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். காட்பாடியில் இருந்து சத்துவாச்சாரிக்கு பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும்.
திருவண்ணா மலையிலிருந்து பெங்களூர் செல்லும் வாகனங்கள் வேலூர் நகருக்குள் வந்து செல்கிறது. இதை தடுக்கும் வகையில் புதிதாக சாலை அமைக்க வேண்டும்.
வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் சாலையில் கண்ணமங்கலம் அருகே சுங்கச்சாவடி மூலம் வரி வசூலிக்கப்படுகிறது. சாலை பணிகள் மேற்கொள்ளாமலே வசூல் செய்யக்கூடாது.
வேலூருக்கு கல்வி, மருத்துவத்திற்காகவும் ஏராளமான வெளி மாநிலத்தவர்கள் வருகை தருகின்றனர். வேலூர் விமான நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
மேல்மொணவூரில் 35 ஏக்கரில் வணிகர்களுக்கான மார்க்கெட் அமைய உள்ளது. மார்க்கெட் அமைந்தால் பொதுமக்கள் மற்றும் ஏராளமான வணிகர்கள் வந்து செல்வார்கள். எனவே தேசிய நெடுஞ்சாலை கடக்கும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கூறினர்.