உள்ளூர் செய்திகள்

சேதப்படுத்தப்பட்ட நந்தி சிலை.

1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நந்தி சிலை சேதம்

Published On 2022-06-25 10:42 GMT   |   Update On 2022-06-25 10:42 GMT
  • குடியாத்தம் காசி விஸ்வநாதர் கோவிலில்
  • போலீசார் விசாரணை

குடியாத்தம் :

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா ஒலக்காசி ஊராட்சி சித்தாத்தூர் கிராமம் பாலாற்றின் கரையின் ஓரம் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீ விசாலாட்சி சமேத ஸ்ரீ வலக்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் உள்ளது.

இந்த கோவிலின் வளாகத்தில் மூலவர் முன் அதிகார நந்தி சிலை உள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நந்தியின் சிலை பீடத்திலிருந்து கீழே தள்ளப்பட்டும் நந்தியின் வாய்ப்பகுதியை சிலர் சேதப்படுத்தியுள்ளனர்.

கோவிலுக்கு வந்த பக்தர்கள் நந்தி சிலை கீழே விழுந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிலையின் வாய்ப்பகுதி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கிராம மக்கள் திரண்டு வந்து பார்த்து நந்தி சிலையை பீடத்தில் வைத்து பூஜைகள் செய்தனர். மேலும் இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்திய இந்து சமய அறநிலையத்துறையின் இக்கோவிலின் ஆய்வாளர் பாரி இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனடியாக போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News