வேலூர் பலவன்சாத்து ஏரியில் 200 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற மாநகராட்சி நோட்டீஸ்
- மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பெயரில் நடவடிக்கை
- இந்த மாத இறுதிவரை ெகடு
வேலூர்:
வேலூரில் 200 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டு வருகிறது. வேலூர் மாநகராட்சியில் பலவன்சாத்து ஏரி பகுதியில் பலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர் அங்கு சென்று அளவீடு செய்தனர். அதில் சுமார் 200 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்த தகவலை அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதையடுத்து மாநகராட்சி சார்பில் தற்போது 200 வீடுகளுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஓரிரு நாட்களில் முடிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த நோட்டீசில், குறிப்பிட்ட நாட்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் உள்ள பொருட்களை தாங்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும் என்றும் மாநகராட்சி சார்பில் அகற்றப்படும்போது பொருட்கள் திரும்பி தரப்படாது என்றும் கூறியிருந்தனர்.
ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் இந்த மாத இறுதியில் அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.