வேலூர் கஸ்பா மாசிலாமணி அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் குமரவேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்
- 1965 இடங்களில் நடந்தது.
- 2 கட்டிடங்களை இடிக்க உத்தரவு.
வேலூர்:
கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்தது.
வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 1965 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. வேலூர் மாநகராட்சியில் 434 இடங்களிலும் காட்பாடி ஒன்றியத்தில் 267, குடியாத்தம் 369,பேரணாம்பட்டு 183,கே.வி.குப்பம் 299,அணைக்கட்டு 799, கணியம்பாடி 130 முகாம்கள் நடந்தன.
வேலூர் கஸ்பா மாசிலாமணி அரசு பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை தொடங்கி வைத்தார்.
பின்னர் பள்ளி வளாகத்தில் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்த 2 கட்டிடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பேருக்கு செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது. 2-வது தவணை 90 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
மீதம் உள்ளவர்களுக்கு இன்று தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்படுத்தி தயார் நிலையில் வைக்க அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவ்வாறு பள்ளிகளை தூய்மைப்படுத்தாத தலைமையாசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகள் திறந்தவுடன் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு வார காலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி, நகர்நல அலுவலர் மணிவண்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.