வேலூர்-ஆற்காடு ரோட்டில் தனியார் ஆஸ்பத்திரி முன்பு அமைக்கப்படும் சுரங்க நடைபாதையை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மேயர் சுஜாதா, பார்வையிட்ட காட்சி.
வேலூர்-ஆற்காடு ரோட்டில் தனியார் ஆஸ்பத்திரி முன்பு சுரங்க நடைபாதை - கலெக்டர், எம்.எல்.ஏ., மேயர் ஆய்வு
- ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு
- ஓராண்டில் பணி முடிந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
வேலூர்:
வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
இங்கு வரும் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளியூர்க்காரர்கள் ஆற்காடு ரோட்டில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி உள்ளனர். இவர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதால் ஆற்காடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஒருவழிப்பாதை, சாலைகளில் தற்காலிகத் தடுப்புகள் என பல்வேறு மாற்றங்கள் செய்தாலும் ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைப்பது என்பது எட்டாக்கனியாக உள்ளது.
சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வருபவர்களுக்கு சுரங்க நடை பாதை அமைத்துக் கொடுத்தால் மட்டுமே ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும் என சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வேலூர் மக்களின் பல ஆண்டு கோரிக்கைக்கு தீர்வு காணும் வகையில் ஆற்காடு ரோட்டில் சி.எம்.சி. ஆஸ்பத்திரி முன்பு சுரங்க நடைபாதை அமைக்க அரசு ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதனையடுத்து இன்று காலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ, . மேயர் சுஜாதா ஆனந்த குமார் ஆகியோர் ஆற்காடு ரோட்டில் சிஎம்சி ஆஸ்பத்திரி முன்பு சுரங்க நடைபாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்தனர்.
சுரங்க நடைபாதை எந்த இடத்தில் அமைத்தால் வசதியாக இருக்கும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து சிஎம்சி நிர்வாகத்தினரிடம் சுரங்கப்பாதை அமைக்க இடம் அளிப்பது குறித்தும் எந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்கலாம் என்பது குறித்தும் ஆலோசனை செய்தனர்.
இது குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில்:- ஆற்காடு ரோட்டில் சி.எம்.சி. ஆஸ்பத்திரி முன்பு சுரங்க நடைபாதை அமைக்க ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.இதற்கான இடம் தேர்வு குறித்து இன்று ஆய்வு செய்யப்பட்டது.
ஓராண்டு காலத்தில் சிறந்த சுரங்க நடை பாதை பணி முடிந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாநகராட்சி கமிஷ்னர் அசோக்குமார், மாநகராட்சி கவுன்சிலர் உடனிருந்தனர்.