உள்ளூர் செய்திகள்

குடியாத்தத்தில் தேசிய கைத்தறி தினத்தை ஒட்டி கைத்தறி ஆடைகள் அரங்கத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்ட போது எடுத்த படம்.

குடியாத்தத்தில் விரைவில் கைத்தறி ஜவுளி பூங்கா

Published On 2022-08-08 15:02 IST   |   Update On 2022-08-08 15:02:00 IST
  • மருத்துவ முகாம் நடந்தது
  • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வேலூர் மாவட்ட கைத்தறி துறை சார்பில் தேசிய கைத்தறி தினம் விழா கொண்டாடப்பட்டது.இந்த விழாவை முன்னிட்டு கைத்தறி துணிகள் கண்காட்சி, மருத்துவ முகாம் மற்றும் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எஸ்.தனஞ்செயன், தாசில்தார் எஸ்.விஜயகுமார், கூட்டுறவு கைத்தறி சங்கங்களின் இணையத்தின் தலைவர் திருவேங்கடம், நகர மன்ற உறுப்பினர்கள் த.புவியரசி, ஜி.எஸ்.அரசு, நவீன் சங்கர், கைத்தறி அலுவலர்கள் சிவானந்தம், விஜயஸ்ரீ, கைத்தறி ஆய்வாளர்கள் கார்த்திகேயன், ராஜவெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கைத்தறி துறை உதவி இயக்குனர் எஸ்.முத்துபாண்டியன் வரவேற்புரை ஆற்றினார்.

குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமுலுவிஜயன், நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி தேசிய கைத்தறி தின விழாவை ஒட்டி அங்கு அமைக்கப்பட்டிருந்த கைத்தறி ஆடைகள் கண்காட்சியை பார்வையிட்டார்.

தொடர்ந்து இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார், 13 நெசவாளர்களுக்கு வங்கி கடனான முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கினார்.

தொடர்ந்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில்:-

குடியாத்தத்தில் கைத்தறி ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கைத்தறி தொழிலில் ஈடுபட்டவர்கள் மிகவும் சிரமமான நிலையில் உள்ளனர். அதனை கருத்தில் கொண்டு கைத்தறி தொழிலை மேம்படுத்தும் வகையில் அதனை சார்ந்துள்ள நெசவாளர்கள் வாழ்வில் மேம்பாடு அடையும் வகையில் குடியாத்தம் பகுதியில் தமிழக அரசு (மினி டெக்ஸ்டைல்ஸ் பூங்கா) கைத்தறி ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதற்காக குடியாத்தம் பகுதியில் 15 முதல் 20 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

15 முதல் 20 நாட்களுக்குள் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்த பின் இங்கு கைத்தறி ஜவுளி பூங்கா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும், அந்த ஜவுளி பூங்காவில் தற்போது கைத்தறி தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களும் கைத்தறி தொழிலை விட்டு சென்றவர்களும் அங்கு தொழில் செய்ய இட வசதி செய்து தரப்படும், அவர்களுக்கு வங்கி கடன் உதவி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் இப்பகுதியில் கைத்தறிக்கு தேவையான நூல் சாயம் போடுதல், கஞ்சி போடுதல் உள்ள தொழிலுக்கு பாதிப்புகள் குறித்து சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து குடியாத்தம் மற்றும் சுற்றுப் பகுதியில் 10 இடங்களில் சிறு சாயநீர் சுழற்சி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் இதற்காக தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு அமைப்பின் விதிமுறைகளை உட்பட்டு சாய கம்பெனிகளில் சிறு சிறு சாயநீர் சுழற்சி மையங்கள் அமைக்கப்படும் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வு மேம்பட பொதுமக்கள் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை வாங்கி உபயோகப்படுத்த வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் கோஆப்டெக்ஸ் இயக்குனர் ருத்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு, நகராட்சி பொறியாளர் சிசில்தாமஸ் உள்பட கைத்தறி கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குனர்கள், கூட்டுறவு கைத்தறி சங்க பணியாளர்கள், நெசவாளர்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News