உள்ளூர் செய்திகள்

சரக்கு ரெயில் பெட்டி இணைப்பு உடைந்ததால் சென்னை ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்

Published On 2022-12-27 09:37 GMT   |   Update On 2022-12-27 09:37 GMT
  • 1 மணி நேரம் வரை தாமதமாக சென்றன
  • பயணிகள் அவதி

வேலூர்:

பெங்களூரில் இருந்து சென்னைக்கு இன்று காலை சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது.

காட்பாடி அடுத்த திருவலத்தை கடந்து சென்றபோது சரக்கு ரெயிலின் பெட்டிகளை இணைக்கும் கப்ளிங் திடீரென உடைந்தது.

இதனால் ரெயில் பெட்டிகள் தனித்தனியாக கழன்றது. இதனைக் கண்ட ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.

இதுகுறித்து காட்பாடி ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள் ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் பயணிகள் ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்தை கடந்து சென்றது.

திருவலம் அருகே சரக்கு ரெயிலின் கப்ளிங் உடைந்து தண்டவாளத்தில் ரெயில் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜோலார்பேட்டை பயணிகள் ரெயில் என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் திருவலத்திற்கு முன்பாக பயணிகள் ெரயில் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்தை தாண்டி நடு வழியில் நிறுத்தப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த ெரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு சரக்கு ரெயிலில் உடைந்த கப்ளிங்கை சரி செய்து பெட்டிகளை இணைத்தனர். இதையடுத்து சரக்கு ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

இதனால் சுமார் ஒரு மணி நேரம் காட்பாடி-சென்னை மார்க்கத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் ரெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமம் அடைந்தனர்.

இதேபோல் அந்த நேரத்தில் அரக்கோணம், சென்னை மார்க்கமாக சென்ற மற்ற ரெயில்களும் சுமார் 1 மணி நேரம் வரை தாமதமாக சென்றன.

Tags:    

Similar News