அமிர்தி உயிரியல் பூங்கா நாளை வழக்கம்போல் செயல்படும்
- ஆயுத பூஜையையொட்டி வாரவிடுமுறை ரத்து
- மது அருந்திவிட்டு வர தடை
வேலூர்:
வேலூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அமிர்தி வன உயிரியல் பூங்கா. ஜவ்வாதுமலைத் தொடரில் சிறிய விலங்குகள் சரணாலயமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், குள்ளநரிகள், குரங்குகள், சிவப்புத் தலை கிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப் பூனைகள், கழுகுகள், வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள், முயல்கள், மலைப் பாம்புகள் உள்ளன.
அடர்ந்து வளர்ந்த மரங்களில் பூத்துக்குலுங்கும் பூக்களை ரசிக்கலாம். அழகான நீர்வீழ்ச்சியும் உள்ளது.
மழைக்காலங்களில் மட்டுமே நீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். மலையேற்றத்திலிருந்து, நீர்வீழ்ச்சியைக் காணலாம். நீர்வீழ்ச்சியில் குளிக்க இப்போது அனுமதியில்லை. புதை மணல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை மட்டும், அமிர்தி பூங்காவுக்கு விடுமுறை. அன்று ஒரு நாள், உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. ஞாயிறு உட்பட மற்ற அனைத்து நாட்களும், பூங்காவில் பொழுதைக் கழிக்கலாம்.
விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமையான நாளை ஆயுத பூஜையை ஒட்டி பூங்கா திறந்திருக்கும். பெரியவர்களுக்கு ரூ.10 சிறுவர்களுக்கு 5 இருசக்கர வாகனங்களுக்கு ரூ.25 கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்குரூ.50 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நாளை வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் அமிர்திக்கு வந்து செல்லலாம் பூங்காவிற்குள் பிளாஸ்டிக் உணவு பொருட்கள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது பூங்காவிற்கு வெளியே உணவு சாப்பிட தனியாக அறைகள் உள்ளன. மது அருந்திவிட்டு பூங்காவிற்கு வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.