வேலூர் பழைய பஸ் நிலையத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலைநிகழ்ச்சியை தொடங்கி வைத்த காட்சி. அருகில் மேயர் சுஜாதா.
மது குடித்தால் தீமை கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்
- பள்ளிகளுக்கு அருகில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை
வேலூர்:
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வுதுறை சார்பில் கள்ள சாராயம் மற்றும் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சி இன்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மேலும் பஸ்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார். பின்னர் அவர் கூறுகையில்:-
கள்ளசாராயத்தை முற்றிலும் ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாராயம் குடித்து 30,40,50 பேர் இறந்து போய் உள்ளனர். நாட்டில் பல இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்து உள்ளது.
கள்ள சாராயம் மற்றும் மது குடிப்பதை தவிர்க்க வேண்டும். மாநிலம் முழுவதும் கடந்த 2 மாதங்களில் போதைப் பொருள் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
போலீசார் ஆங்காங்கே போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். போதைப் பொருள் பயன்படுத்துவதால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் இளைய தலைமுறையினர் வழி தவறி செல்கின்றனர்.
பள்ளிகளுக்கு அருகில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க போலீசாரை நியமித்து சோதனை செய்து வருகின்றனர்.
மேலும் வருவாய்த் துறையினரும், நானும் ஆய்வு செய்து வருகிறேன். வேலூர் மாவட்டத்தில் போதைப்பொருள் இல்லாமல் தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மேயர் சுஜாதா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அணைக்கட்டு பாபு, உதவி கலெக்டர் பூங்கொடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.