உள்ளூர் செய்திகள்

ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட குடியாத்தம் முதியவர் கைது

Published On 2023-11-17 15:12 IST   |   Update On 2023-11-17 15:12:00 IST
  • 11 டன் ரேசன் அரிசி பறிமுதல்
  • சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

வேலூர்:

தமிழகத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசியை சிலர் விலை கொடுத்து வாங்கி ஆந்திர மாநிலத்துக்கு கடத்துகின்றனர்.

இதை பெரியளவில் தொழிலாக செய்து வருபவர்கள் லாரிகள் மூலம் ஆந்திர மாநிலத்துக்கு கடத்திச் சென்று அங்குள்ள அரிசி ஆலைகளில் 'பாலீஸ்' செய்து மீண்டும் தமிழ்நாட்டில் அதிக விலைக்கு விற்று வருவதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதாக புகார் கூறப்படுகிறது.

கோடிகளில் புரளும் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாடு முதல்வருக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதி சலசலப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து, தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஆனாலும், ரேசன் அரிசி கடத்தல் தொடர்கிறது. கடத்தல் தொழிலை பல ஆண்டுகளாக செய்து வரும் நபர்களை கைது செய்ய முடியாமல் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் திணறி வருகின்றனர்.

கடந்த செப்.23-ந் தேதி பள்ளிகொண்டா அருகேயுள்ள ரகசிய கிடங்கில் இருந்து லாரியில் கடத்த முயன்ற 11 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து நாகராஜ் மற்றும் சிவக்குமார் ஆகியோரை பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் போலீசார் பிடித்து உணவு கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக உணவு கடத்தல் தடுப்புப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது வட தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தலில் முக்கிய நபராக இருந்து வரும் குடியாத்தம் கணேசன் (வயது 67) என்பவர் குறித்த தகவல் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தேடிவந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் லாரியுடன் 14 டன் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கிலும் குடியாத்தம் கணேசனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து,

வேலூர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்புப் பிரிவினர் கணேசனை கைது செய்தனர்.

Tags:    

Similar News