ரூ.50 கோடி வரி பாக்கி வசூல் செய்ய அதிரடி உத்தரவு
- ஆலோசனை கூட்டம் நடந்தது
- மாத இறுதிக்குள் வசூலிக்க நடவடிக்கை
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் நடைபெறும் வரி வசூல் செய்யும் பணியை தீவிரப்படுத்த கமிஷனர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான ஏராளமான கடைகள், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளது. அவற்றை ஏலம் விடப்பட்டு வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏலம் எடுத்தவர்களில் பலர் வாடகை செலுத்தாமல் உள்ளனர். சுமார் ரூ.15 கோடி வரை வாடகை பாக்கி நிலுவையில் உள்ளது.
இதேபோல சொத்து வரி, வீட்டு வரி, பாதாள சாக்கடை வரி உள்ளிட்ட வரிகளும் பலர் கட்டாமல் உள்ளனர். ரூ.35 கோடி வரை பாக்கி உள்ளது. இந்த தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 30 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகை வசூலிக்க மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் தலைமையில் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் வருவாய் ஆய்வாளர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கமிஷனர் பேசுகையில்:-
மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் வாடகையினை பலர் கட்டாமல் உள்ளனர். அவர்கள் குறித்த பட்டியலை வைத்துக் கொண்டு வரிகளை வசூல் செய்யும் பணியினை தீவிரப்படுத்த வேண்டும்.
தற்போது 95 சதவீதம் பாக்கி உள்ள தொகை வசூல் செய்திருக்க வேண்டும். இந்த பணியில் மந்தம் உள்ளது.
பணிகளை முழு அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டும். இந்த மாத இறுதிக்குள் 75 சதவீதம் நிலுவையில் உள்ள வரிகளையும், வாடகையினையும் வசூல் செய்திருக்க வேண்டும் என்றார்.