வேலூர் காட்பாடி சாலையில் மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினரை படத்தில் காணலாம்.
வேலூரில் மரக்கடையில் பயங்கர தீ விபத்து
- ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் கொசப்பேட்டையை சேர்ந்தவர் மாதவன். சிஎம்சி அருகே உள்ள கள்ளு கடை சந்து பகுதியில் லட்சுமி டிம்பர்ஸ் என்ற பெயரில் மரச்சாமான்கள் செய்யும் பட்டறை வைத்துள்ளார். இதில் ஜன்னல் கதவு மற்றும் சோபா நாற்காலி கட்டில் பர்னிச்சர் போன்றவை செய்யப்படுகின்றன.
மரக் கடையில் தீ விபத்து
இதற்காக மரங்களை அங்கு வாங்கி அடுக்கி வைத்திருந்தனர்.
இன்று காலை சுமார் 6 மணிக்கு இந்த மரக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.கொஞ்சம் கொஞ்சமாக பற்றி எரிந்து அங்கிருந்த மரச்சாமான்கள் மற்றும் மரங்களில் பற்றி எரிந்தது.
கடையிலிருந்து புகை மண்டலம் எழுந்ததைக் கண்ட பகுதியினர் உடனடியாக வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் பட்டறையில் காட்டு தீ போல மரங்கள் மற்றும் அங்கிருந்த மரச்சாமான்கள் கொழுந்து விட்டு எரிய தொடங்கின.
இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பட்டறையில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.
கள்ளுக்டை சந்து பகுதியில் ஏராளமான மரப்பட்டறை மற்றும் கடைகள் உள்ளன. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் விபத்து தடுக்க பட்டது.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.