முதியோர்களை கொடுமைப்படுத்திய காப்பக நிர்வாகிகள் மீது போலீசில் புகார்
- அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள குகையநல்லூர் கிராத்தில் 'செயின்ட் ஜோசப் கருணை இல்லம்' என்ற பெயரில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது.
இந்த இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், சரியான உணவு, தங்குமிட வசதி இல்லை என்றும் வேலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. அங்கு வருவாய் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த முதியவர்கள் தங்களை கொடுமை படுத்துவது குறித்து அவர்களிடம் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து குகையநல்லூர் கருணை இல்லத்தில் தங்கி இருந்த முதியவர்கள் 69 பேர் மீட்கப்பட்டு அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் தாசில்தார் ஜெகதீஸ்வரன் தலைமை யிலான வருவாய்துறை அதிகாரிகள் காப்பகத்துக்கு சீல் வைத்தனர்.
அப்போது அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்த ஊழியர் சாந்தி போலீசார் எச்சரிக்கை விடுத்ததால் அங்கிருந்து சென்றார்.
நேற்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 42 பேர் வேலூர் ரெட்கிராஸ் முதியோர் இல்லம், நம்பிக்கை இல்லம், வள்ளலார், விவேகானந்தர், கசம் எம்.பி.கே.ஜி பண்ணை, ஆத்ம சாந்தி ஆகிய இல்லங்களுக்கு அனுப்பிவைக்க பட்டனர்.
மற்றவர்கள் உறவி னர்கள் அரவணைப்பிலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த கருணை இல்லத்தின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து மர்மங்கள் நீடித்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் இந்த தொண்டு நிறுவனத்தில் எத்தனை பேர் தங்கி இருந்தனர்.
போலீசில் புகார்
அவர்களில் எத்தனை பேர் இறந்தனர் போன்ற விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
கருணை இல்ல நிர்வாகிகள் மீது வருவாய் துறை சார்பில் இன்று திருவலம் போலீசில் புகார் அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். போலீஸ் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.