உள்ளூர் செய்திகள்

வேலூர் முத்துரங்கம் அரசு கல்லூரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மாணவர்களிடையே பேசிய காட்சி.

தமிழகத்திற்கு தனிக் கல்வி கொள்கை உருவாக்க திட்டம்

Published On 2022-11-07 15:29 IST   |   Update On 2022-11-07 15:29:00 IST
  • வேலூரில் அமைச்சர் பொன்முடி பேச்சு
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

வேலூர்:

வேலூர் முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரியில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று காலை மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரி 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கல்லூரியில் தற்போது மாணவர்களை விட மாணவிகள் தான் அதிகமாக உள்ளனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் கல்வி, சுகாதாரம் ஆகியவை இரு கண்களாக நினைத்து செயல்படுகிறார். இந்த துறைகளை மேம்படுத்துவது தான் அவரது நோக்கம். கருணாநிதி ஆட்சியில் தான் தமிழகத்தில் அதிக அளவில் கல்லூரிகள் திறக்கப்பட்டன.

உயர் கல்வித் துறை பொற்காலமாக மாறும். அதற்கு சாதகமான சூழல் உள்ளது. இதற்கு மாணவ மாணவிகள் ஒத்துழைக்க வேண்டும். நான் முதல்வன் திட்டம் தொடங்க ப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் நீங்கள் முதல்அமைச்சர் ஆக வேண்டும் என்பது இல்லை. உங்கள் துறையில் நீங்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான்.

நாங்கள் படிக்கின்ற காலத்தில் பெண்கள் குறைந்த அளவிலேயே உயர் கல்வி படிக்க முடிந்தது.

ஆனால் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் முயற்சியால் தற்போது அதிக அளவில் பெண்கள் படித்து வருகின்றனர்.

தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க பார்க்கிறார்கள். அதனை நாங்கள் எதிர்க்கிறோம். தமிழ் தாய் மொழி ஆங்கிலம் உலக தொடர்பு மொழி இந்த இரண்டு மொழிகள் நமக்கு போதும்.விருப்பப்பட்டவர்கள் இந்தியை படிக்கலாம். ஆனால் இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழகத்திற்கு என்று தனி கல்வி கொள்கையை உருவாக்க முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார். அதற்கான தனி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் சுற்று சுவர் மற்றும் மைதானம் வசதி உள்ளிட்ட வசதிகள் படிப்படியாக செய்து தரப்படும். திராவிட மாடல் ஆட்சிக்கு பெண்கள் பிரச்சாரமாக மாற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கல்லூரி கல்வி இணைஇயக்குனர் காவேரி அம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News