கிளினிக்கில் அதிகாரிகள் சோதனை நடத்திய காட்சி.
போலி டாக்டர் நடத்தி வந்த கிளினிக்கிற்கு சீல்
- ஹோமியோபதி படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தார்
- கலெக்டர் உத்தரவின் பேரில் நடவடிக்கை
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் பேரூராட்சி பஸ் ரோடு பகுதியில் முறையான மருத்துவம் படிக்காமல் ஹோமியோபதி மட்டும் படித்து விட்டு ஆங்கில வைத்தியம் பார்க்கப்படுகிறது என்று கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் மனுக்கள் வந்தது.
இதனால், புகார் மீதான உண்மை தன்மை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். அதன்படி, தாசில்தார் ரமேஷ் தலைமையில் மண்டல துணை தாசில்தார் ராமலிங்கம், ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று சம்பந்தப்பட்ட கிளினிக்கிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு ஒருவர் பொதுமக்களுக்கு ஊசி, ஆங்கில மருந்துகள், மாத்திரைகளை வழங்கி கொண்டிருந்தார்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் திருப்பத்தூரை சேர்ந்த பெருமாள் (வயது46), என்பதும், இவர் ஹோமியோபதி படித்து விட்டு ஒடுகத்தூரில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் அங்கிருந்த மருந்து, மாத்திரைகள், ஊசி போன்றவற்றை கைப்பற்றி எடுத்து சென்றனர். மேலும், அனுமதியின்றி நடத்தி வந்த கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.