சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேர் சஸ்பெண்டு
- பணியில் மெத்தனமாக செயல்பட்டதால் நடவடிக்கை
- போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப் பொருட்களை முழுமையாக தடுக்க மாவட்ட எல்லை பகுதிகள் மற்றும் சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளில் 24 மணிநேரமும் வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக, போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர வாகன சோதனைகள் நடத்தப்பட்டு போதைப் பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல்கள் தடுத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை மாநில எல்லை சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் இரவு வாகனச் சோதனை யில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, குடியாத்தம் டி.எஸ்.பி. ராமமூர்த்தி ஆய்வுக்காக அங்கு வந்தார்.
சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டு வந்த காட்பாடி போலீஸ் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த், வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏட்டு மோதிலால் மற்றும் நாராயணசாமி, மேல்பாடி போலீஸ் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் விஜயன், ஏட்டு ஜெகதீசன் ஆகியோர் பணியில் மெத்தனமாக செயல்பட்டனர்.
இது தொடர்பாக டி.எஸ்.பி. ராமமூர்த்தி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்தார்.
5 பேரையும் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் சஸ்பெண்டு செய்து உத்தர விட்டார்.