4 தங்கப்பதக்கம் வென்ற வீரருக்கு எஸ்.பி. பாராட்டு
- காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் சாதனை
- இளைஞர்கள் விளையாட்டு பயிற்சியில் கவனம் செலுத்தினால் தேவையற்ற சிந்தனைகள் வராது - எஸ்.பி. அறிவுறுத்தல
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் சீவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி ஆசிய வலுத்தூக்கும் வீரர் இவரது மகன் ஜெயமாருதி (வயது 18).
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சிறு வயது முதலே வலுதூக்கும் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகிறார்.
கடந்த நவம்பர் மாதம் 30-ந் தேதி நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டிகளில் சப் ஜூனியர் 74 கிலோ உடல் எடை பிரிவில் கலந்து கொண்டு ஒட்டுமொத்தமாக 635.5 கிலோ எடையை தூக்கி 4 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
சாதனை படைத்த ஜெய மாருதியை பாராட்டி வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கினார்.
தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொண்ட சாதனை படைத்த ஜெய் மாருதி உள்ளிட்ட வீரர் மற்றும் வீராங்கனைகளை சென்னையில் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் அழைத்து பாராட்டினார்கள்.
சாதனை படைத்த மாணவன் வீட்டிற்கு நேரடியாக சென்று பாராட்டிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
காமன்வெல்த் வலுதூக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு 4 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த ஜெய மாருதியின் இல்லத்திற்கு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நேரடியாக சென்று சால்வை அணிவித்தும் பூங்கொத்து வழங்கியும் மாவட்ட காவல்துறை சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சேகர், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நிருபர்களிடம் கூறுகையில்:-
குடியாத்தம் அடுத்த சீவூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஜெய மாருதி காமன்வெல்த் போட்டிகளில் நான்கு தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்த நிகழ்வு மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக உள்ளது. அவர் விரைவில் உலக சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் பெற வாழ்த்துகிறோம்.
சாதனை படைத்த ஜெயமாருதிக்கு வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும் எனவும் அதுவும் அவரது இல்லத்திற்கே சென்று பாராட்ட வேண்டும் என விரும்பி இல்லத்திற்கே வந்து பாராட்டுகிறோம் இளைஞர்கள் விளையாட்டு பயிற்சியில் கவனம் செலுத்தினால் தேவையற்ற சிந்தனைகள் வளராது விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து ஈடுபட்டால் தலைமை பண்பு, தன்னம்பிக்கை வளரும் ஜெய மாருதியை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள் சாதனைகள் பல படைக்க வேண்டும் அவர்களுக்கு தேவையான உதவிகளை காவல்துறை சார்பில் செய்ய தயாராக இருக்கிறோம். மேலும் விளையாட்டுப் போட்டிகளில் சாதனைகள் மற்றும் பரிசுகளை வெல்லும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் காவல்துறை மற்றும் ராணுவத்தில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை உள்ளது மற்ற துறைகளில் வேலைவாய்ப்பில் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறும் இளைஞர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி விளையாட்டு போட்டிகளில் அதிக அளவு கலந்து கொண்டு தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.